30 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு; 150 பேர் கைது! - புதுச்சேரி பா.ஜ.க பந்த்தில் வன்முறை | 30 vehicles cracked, 150 arrested for Violence in Puducherry

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (26/11/2018)

கடைசி தொடர்பு:16:45 (26/11/2018)

30 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு; 150 பேர் கைது! - புதுச்சேரி பா.ஜ.க பந்த்தில் வன்முறை

சபரிமலை தீர்ப்புக்காக புதுச்சேரியில், பா.ஜ.க நடத்திய பந்த் போராட்டத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, 150 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

வன்முறை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், சபரிமலையின் புனிதத்தைக் காக்கவும், கேரள அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கும் விதமாகவும் புதுச்சேரியில் பா.ஜ.க-வினர் இன்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்திவருகின்றனர். பந்த் காரணமாக இன்று பஸ், ஆட்டோ மற்றும் டெம்போக்கள் இயங்காது என்று பா.ஜ.க சார்பில் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால், பேருந்து மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்துக்கு ஆதரவு தராததால், ஆட்டோ, டெம்போக்கள் வழக்கம்போல இயங்கின. ஈசிஆர் சாலையில் நேற்று இரவே தமிழக அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. அதேசமயம், அரசுப் பேருந்துகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டுவருகின்றன. பிரதான வர்த்தக வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

பாஜக

தனியார் பேருந்துகளைப் பொறுத்தவரை படிப்படியாக இயக்கப்பட்டுவருகிறது. ஒருசில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி நகரம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவில் இருந்து தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என 30 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன் உட்பட 150 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதற்கிடையில், ”எந்தவித காரணமுமின்றி அரசியல் உள்நோக்கத்தோடு புதுச்சேரியில் பா.ஜ.க-வினர் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரக் கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க-வினர் இன்று வன்முறையில் ஈடுபட்டால், கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க