முதல்ல ஹெலிகாப்டர்... இப்போ ரயில்... - 10 நாள்களுக்குப் பிறகு நாகை செல்லும் முதல்வர் | cm palanisami will visits gaja storm affected areas on wednesday

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (26/11/2018)

கடைசி தொடர்பு:17:05 (26/11/2018)

முதல்ல ஹெலிகாப்டர்... இப்போ ரயில்... - 10 நாள்களுக்குப் பிறகு நாகை செல்லும் முதல்வர்

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

கஜா புயலுக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்திய அரசு, நிவாரணப் பணிகளில் சொதப்பியது. இருப்பினும், புயல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட சேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு,  அவற்றைக் கொடுக்கும் பொருட்டு, அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் தீவிரமாகப் பணியாற்றிவருகின்றனர். இதற்கிடையே, புயல் பாதித்தபோது, சேதங்களைப் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் சாலை மார்க்கமாக இரண்டாவது நாளே சென்று பார்வையிட்டனர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, புயல் முடிந்த நான்கு நாள்கள் கழித்தே சேதங்களைப் பார்வையிட்டார். அதுவும் ஹெலிகாப்டரில் சென்றுதான் பார்வையிட்டார். மொத்தம் இரண்டு மாவட்டங்களைப் பார்வையிட்டவர், வானிலையைக் காரணம் காட்டி மற்ற மாவட்டங்களைப் பார்வையிடவில்லை. இது, அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டதற்கு முதல்வரை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனால், விமர்சனம்குறித்து பதிலளித்த முதல்வரோ, ``சாலை வழியாகச் சென்றால் அதை எப்படி முழுமையாகப் பார்வையிட முடியும். ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து, ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு மரங்கள் சாய்ந்தன, சேதங்கள் எவ்வளவு என்பதை முழுவதுமாகப் பார்வையிட்டோம். 

ஹெலிகாப்டரில் சென்று சேதங்களைப் பார்வையிட்டு, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையெல்லாம் பிரதமரிடம் வழங்கியுள்ளோம்" என்றவர், ``சாலை மார்க்கமாகச் சென்ற ஸ்டாலின் எத்தனை இடங்களைப் பார்வையிட்டார். ஸ்டாலின் சென்று எந்த இடத்தில் புகைப்படம் எடுத்து வந்தார் சொல்லுங்கள் பார்ப்போம்"  என்று ஸ்டாலினை ஒப்பிட்டுப் பேசினார். இது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், புயல் பாதித்த நாகை, திருவாரூர்  மாவட்டத்தை நாளை மறுநாள் முதல்வர் பார்வையிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, நாளை அவர் ரயில்மூலம் நாகப்பட்டினம் செல்லவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்து நான்கு நாள்களுக்குப் பிறகு, இரண்டு மாவட்டங்களைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இப்போது 10 நாள்களுக்குப் பிறகு இரண்டு மாவட்டங்களைப் பார்வையிட உள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க