`பொன்.மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் கூடாது!’ - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கறார் உத்தரவு | Don't take action against pon manickavel says Madras HC

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (26/11/2018)

கடைசி தொடர்பு:16:04 (26/11/2018)

`பொன்.மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் கூடாது!’ - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கறார் உத்தரவு

``நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்பிக்காமல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராகத் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது'' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை ஆணையர் திருமகள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவருக்கு எதிராகத் தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்கள் இருப்பதாகவும், அவர் யார் என்று இப்போது கூற முடியாது எனவும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். அப்போது, மயில் சிலை காணாமல் போனதாகக் கூறப்படும் 2004-ம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2,100 ஆவணங்கள் 2009 - 2013-ம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பொன்மாணிக்கவேல்

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்நிலையில், தனக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி-யில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பெண் எஸ்.பி ஒருவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்து விசாரணை ஆவணங்களைக் கேட்டதாகவும், தான் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தனக்குப் பின்னால் சதி நடப்பதாகவும், தன் குழு குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உடனடியாக ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் வேறு வழக்கு விசாரணையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில்  ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.