வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (26/11/2018)

கடைசி தொடர்பு:17:55 (26/11/2018)

``காதலியுடன் சேர்த்துவையுங்கள்!’’ - கலெக்டர் அலுவலகத்தில் உயிரை மாய்க்க முயன்ற இளைஞர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் தன்னை சேர்த்துவைக்கக் கோரி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (27). இவர், அதே ஊரில் வசிக்கும் மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அந்த பெண்ணின் வீட்டாருக்குத் தெரியவரவே, அப்பெண்ணுக்கும் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து சில தினங்களுக்கு முன்பு நிச்சயம் செய்துள்ளனர். இச்செய்தி அறிந்த கருப்பசாமி, இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீப்பற்றவைக்க முயன்றார். இன்று மக்கள் குறைதீர்ப்பு நாள் என்பதால், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள், அவரை தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து போலீஸார், கருப்பசாமியை விசாரணைக்காக தேனி நகர காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இச்சம்பவம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பில் அலட்சியம்! 

நெல்லையில், கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை சோதனைசெய்துவருகிறது காவல் துறை. இன்று காலை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பில் இருந்த போலீஸாரின் அலட்சியத்தால், கருப்பசாமி மண்ணெண்ணைய் எடுத்துவந்து கலெக்டர் வாகனத்தின் அருகில் வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மேலும், கலெக்டர் அலுவலக வாசலில் போலீஸாருக்காக அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக நிழற்குடையும் அரைகுறை பணிகளோடு பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், மரத்தின் நிழலில் நின்றுகொண்டு பொதுமக்களை சோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.