`நடிகை காயத்ரி ரகுராம் சிக்கியது எப்படி?' - விவரிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  | Actress gayathri raguram caught by police in drunk and drive case

வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (26/11/2018)

கடைசி தொடர்பு:05:56 (28/11/2018)

`நடிகை காயத்ரி ரகுராம் சிக்கியது எப்படி?' - விவரிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 

நடிகை காயத்ரி ரகுராம்

சென்னை அடையாற்றில் நடந்த வாகனச் சோதனையில், சொகுசு காரில் வந்த நடிகை காயத்ரி ரகுராம், குடிபோதையில் இருந்ததாகவும் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

வழக்கமாக சென்னையில், இரவு நேரங்களில் வாகனச் சோதனை நடத்தப்படும். இந்தச் சோதனையில் மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் அதிக அளவில் சிக்குவதுண்டு. அவர்களிடம் வாகனத்தைப் பறிமுதல் செய்யும் போலீஸார், மறுநாள் போதை தெளிந்த பிறகு வாகனத்தை அவர்களிடம் ஒப்படைப்பார்கள். அதோடு அபராதமும் அவர்களிடம் வசூலிக்கப்படும். 

சென்னை அடையாற்றில் திரு வி.க பாலம் அருகில் போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டினம்பாக்கம் எம்.ஆர்.சி நகரிலிருந்து அடையாறு நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அதைப் பார்த்ததும் போலீஸார் காரை மடக்கினர். காரை ஓட்டிய பெண்ணிடம், மது குடித்துள்ளாரா என்பதைக் கண்டறியும் கருவியைக் கொடுத்து ஊதுமாறு போலீஸார் தெரிவித்தனர். அப்போது அவர், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து, `நீங்கள் முதலில் ஊதுங்கள்' என்று கூறியுள்ளார். இதனால் அவர் ஊதியுள்ளார். இதையடுத்து, போலீஸார் அந்தப் பெண்ணை அந்தக் கருவியில் ஒருவழியாக ஊத வைத்தனர். அப்போது கருவியில் 33 பாயின்ட் எனக் காட்டியது. 30 பாயின்ட்ஸ் என்று கருவி காட்டினால் போதும் அவர்கள்மீது மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்ய முடியும். இதையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீஸார் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் காருக்குரிய ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அப்போது, அந்தப் பெண்ணிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. இதைத் தொடர்ந்து, போலீஸார் அந்தப் பெண்ணின் காரை ஓட்டி அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்தனர். அவர்மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். 

சொகுசு காரில் வந்த பெண் யார் என்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர் வேறுயாருமில்லை நடிகை காயத்ரி ரகுராம் என்று போலீஸார் தெரிவித்தனர். அவரிடம் சோதனை நடத்திய சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசினோம். 

``சம்பவத்தன்று நாங்கள் அடையாறு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவ்வழியாக குடித்துவிட்டு சொகுசு காரில் சென்ற பெண்ணை மடக்கினோம். முதலில் அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. காரை விட்டு இறங்கிய பிறகுதான் அவர் நடிகை காயத்ரி ரகுராம் என்று தெரிந்தது. நாங்கள் விசாரித்தபோது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். மது குடித்துள்ளாரா என்பதைக் கண்டறியும் கருவியில் அவர் ஊதியபோது 33 பாயின்ட்ஸ் எனக் காட்டியது. இதையடுத்து, அவர்மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தோம். டிரைவிங் லைசென்ஸ் அவரிடம் இல்லை.  அதனால், அதுதொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளோம். நடிகை என்பதால் இந்தச் சம்பவம் பரபரப்பாகிவிட்டது" என்றார்.