வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (26/11/2018)

கடைசி தொடர்பு:17:29 (26/11/2018)

ம.தி.மு.க போராட்டத்தில் தி.மு.க! - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா ஸ்டாலின்

`தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இருக்கிறதா என்பதுகுறித்து ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்' என வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அளித்த நேர்காணலில், `ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகள் தி.மு.க-வுடன் கொள்கை அளவில் ஒத்துப்போயிருந்தாலும் அவை கூட்டணியில் இருப்பதாக அர்த்தம் இல்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்பே கூட்டணிகுறித்து பேசப்படும் ' எனப் பேசியிருந்தார். இவரின் பேச்சு தி.மு.க-வுடன் தொடர் நட்பில் இருந்த காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தது. இருப்பினும், `கூட்டணிகுறித்து துரைமுருகன் கூறிய கருத்தை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது' எனப் பேசினார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். அதேநேரம், கூட்டணி விவகாரத்தில் இந்தக் கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் பேச்சுகள் எழுந்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் கூட்டணி கருத்து ம.தி.மு.க நிர்வாகிகளை வேதனைப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தான் முடிவு கூற வேண்டும். நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை அவர்தான் கூற வேண்டும்" எனக் கூறினார். இதைக் கூறிய சிறிது நேரத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி டிசம்பர் 3-ம் தேதி வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு தி.மு.க ஆதரவு அளிக்கும் என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆதரவு தெரிவித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க