`மனைவி சொன்னதால 33 வருஷமா செருப்பு தைக்கிறேன்!' - நெகிழும் கந்தசாமி | Kandasamy doing Sewing shoes for 33 years because of his wife's wish

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (26/11/2018)

கடைசி தொடர்பு:18:15 (26/11/2018)

`மனைவி சொன்னதால 33 வருஷமா செருப்பு தைக்கிறேன்!' - நெகிழும் கந்தசாமி

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், மதிய வேளையில் பிசியாக செருப்பு தைத்துக்கொண்டிருந்த கந்தசாமியை சந்தித்துப் பேசினோம். கடந்த, 33 வருடங்களாக செருப்பு தைக்கும் அவருக்கு, அது  குலத்தொழில் கிடையாது. அவர் அந்த வேலையை  மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் செய்துவருகிறார். அவர் இந்த வேலைக்கு வந்த கதை சுவாரஸ்யமானது.  

"எனக்கு சொந்த ஊர் இதேதான். ஆரம்பத்தில் கிடைக்கிற கூலி வேலைக்குப் போவேன். பவுனு, என் பொண்டாட்டி பேரு.  காலைல,  அவசர அவசரமா பழைய கஞ்சி குடிச்சிட்டு, அதையே கொஞ்சம் தூக்கு வாளியில  ஊத்திகிட்டு வேளைக்கு கிளம்பிருவா. ஒருநாள் வழக்கம்போல, தாவாரத்தில மாட்டி இருந்த கொத்தையும், செருப்பையும் எடுத்தா,  அவசர அவசரமா எடுத்ததுல செருப்பு பிஞ்சுபோச்சு. எங்கிட்ட 'இந்தாங்க,  இந்த செருப்பை தச்சிட்டு வாங்கன்னு' சொன்னா. 


 தொழில்

எங்கள் ஊர்ல வயசான ஒருத்தர்  செருப்பு தைப்பார். அன்னைக்கு அவர் வரல. மூணு நாளா அவர் வரவே இல்லை. என் பொண்டாட்டியும் வெறும் காலோடவே வேலைக்கு போயிட்டிருந்தா.  ஒரு நாள்,  கொஞ்சம் கோவத்தோட,  ' இப்புடி செருப்ப தூக்கிட்டு அலையிறதுக்கு நீங்களே ஊசி, நூலு வாங்கி தைச்சுபுடலானு' சொல்லிட்டு அவ கிளம்பிட்டா. அன்னைக்கு செருப்பு தைக்கிற  பெரியவர் வீட்டுக்கு போனேன். அவருக்கு உடம்பு  சரியாகல. படுத்த படுக்கையாவே இருந்தார். அவர்ட்ட கொஞ்சம் காச கொடுத்துட்டு நூல், ஊசி வாங்கிட்டு வந்தேன். அவ வேளைக்குப் போன பிறகு நானே செருப்பை தச்சு , மறைச்சு வச்சிருந்தேன். சாயங்காலம் வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தவள்ட்ட,  இந்தா செருப்புனு  தூக்கிப்போட்டேன். 

'செருப்பு தைக்கிற பெரியவருக்கு  உடம்பு சரியாயிடுச்சான்னு'  கேட்டுகிட்டே செருப்ப பார்த்தா. நான், ''இல்ல அவரு ரொம்ப முடியாமதான் இருக்காரு. நான்தான் தச்சேன்''னு சொன்னேன். நமட்டுச் சிரிப்பு சிரிச்சவ, 'பேசாம நீங்க செருப்பையே தைக்கலானு' சொல்லிட்டு கிளம்பிட்டா. இதையே தொழிலா செய்யலாம்னு அப்பவே முடிவுபண்ணிட்டேன்.  உங்களுக்குப் பிடிச்சிருந்தா செய்யுங்கன்னு அவளும் நம்பிக்கை கொடுத்தா. 33 வருஷமா இந்தத் தொழில்தான் பாக்குறேன்.  எனக்கு ஒரு பொண்ணு,   ரெண்டு  பையன். மகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். ரெண்டு மகனையும் என்ஜினீயரிங் படிக்க வச்சிட்டேன். சொந்தக்காரங்க எல்லாம் என்ன சொல்லுவாங்கன்னெல்லாம் நான் யோசிக்கல தம்பி. எல்லா தொழிலும் சாமிதான். விரும்பி செஞ்சேன். இன்னைக்கு நாங்க நாளு பேரும் நல்லா இருக்கோம்" என்றார் நம்பிக்கையுடன்.