வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (26/11/2018)

கடைசி தொடர்பு:17:59 (26/11/2018)

`பணியின்போது செல்போனுக்கு தடை' - டிஜிபி உத்தரவால் குமுறும் போலீஸார்!

'பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார் செல்போன் பயன்படுத்தக் கூடாது' என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

போலீஸ்

சமூக வலைதளங்களில் காக்கி சீருடையில் இருக்கும் போலீஸ் துணை கமிஷனர் ஒருவர், பாடல் பாடுவதுபோன்றும், வசனங்கள் பேசுவதுபோன்றும் இரண்டு வீடியோக்கள் நேற்று வைரலாகின. இந்த வீடியோக்கள் குறித்து காவல்துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டது. `மக்களுக்காக 24 மணி நேரமும் சேவை செய்யவேண்டிய அதிகாரிகள் இப்படிச் செய்யலாமா?' எனப் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துவந்தனர். இதேபோன்று சில அதிகாரிகள், பணி நேரத்தின்போது செல்போனை அதிகமாகப் பயன்படுத்திவருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அதிகம் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார் செல்போன் பயன்படுத்தக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக, அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள டிஜிபி அலுவலகம், ``சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு பணிக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பணி நிமித்தமாக செல்போன் பயன்படுத்தலாம். பாதுகாப்புப் பணியின்போது காவலர்கள் அதிக நேரத்தை செல்போனிலே செயல்படுத்துவதாகப் புகார் எழுந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு - விவிஐபி, கோயில், திருவிழாக்கள், உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. அனைத்து காவல் நிலையத்திலும் உள்ள உயர் அதிகாரிகள், அவர்களுக்குக் கீழ் உள்ள காவலர்களுக்கு இதை அறிவுறுத்த வேண்டும்" எனவும் கூறப்பட்டுள்ளது.

டிஜிபி சுற்றறிக்கை

டிஜிபி-யின் இந்த உத்தரவு பற்றி காவல் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அதில், ``எல்லா காவலர்களுக்கும் வாக்கி டாக்கி கொடுக்கப்படவில்லை. வட சென்னையில் ரோந்துப்பணியில் இருக்கும் காவலர்களுக்கு வாக்கி டாக்கி கொடுக்கப்படவில்லை. அங்கெல்லாம் செல்போன் மூலமாகவே விவிஐபி-க்கள் வருவது, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது உள்ளிட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன. போலீஸ் டு போலீஸ் இலவசமாக செல்போன் பேசிக்கொள்ளலாம். இதை வைத்துக்கொண்டு நிறைய இளம் காவலர்கள் அதிக நேரம் செல்போனில் பேசுவது உண்மைதான். அதற்காக மற்ற காவலர்கள் என்ன செய்தார்கள்? அவ்வாறு பேசுபவர்களுக்குத் தடை விதிக்கலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது அத்தியாவசியம், அவசரம் என்றால் எங்களை எப்படித் தொடர்புகொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், ஏதாவது ஒரு விபத்து அல்லது குற்ற நிகழ்வுக்குச் சென்றால், தற்காப்புக்காக முதலில் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று இவர்கள்தான் கூறியுள்ளனர். தடை விதித்தால் எப்படி வீடியோ எடுப்பது" என்று குமுறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க