`காவலர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிய என்ன தயக்கம்?' - மனித உரிமைகள் ஆணையம் விளாசல் | Human right commission order to police commissioner to submit report

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (26/11/2018)

கடைசி தொடர்பு:18:36 (26/11/2018)

`காவலர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிய என்ன தயக்கம்?' - மனித உரிமைகள் ஆணையம் விளாசல்

சென்னையில், 'காவலர் தர்மனை வாகனத்திலிருந்து தள்ளிவிட்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிய காவல் துறை ஏன் தயங்குகிறது?' என மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. 

காவலர்


இரண்டு நாள்களுக்கு முன் வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்அப்பில் பரவியது. அந்த வீடியோவில், தேனாம்பேட்டையில் உள்ள சிக்னல் ஒன்றிலிருந்து இருசக்கர வாகனம் கடந்துசெல்கிறது. அங்கே நின்றுகொண்டிருந்த காவலர், குறிப்பிட்ட அந்த வாகனத்தை மடக்கிப் பிடிக்கிறார். அப்போது, அதிலிருந்த நபர் தடுமாறிக் கீழே விழுகிறார். இதையடுத்து, சம்பந்தப்பட்டவரை போக்குவரத்து காவலர் வாகனத்தில் ஏற்றிச்செல்கிறார். இந்த வீடியோ காட்சியில், இருசக்கர வாகனத்தை ஓட்டிசென்றவர் தர்மன். போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றிவரும் இவர், தாயின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு விடுப்பு கேட்டதற்கு உயரதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

மனித உரிமைகள் ஆணையம்

அதனால், வாக்கிடாக்கியில் அவர் உயர் அதிகாரிகளைத் தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், வாகனத்தை மடக்கிப்பிடித்து காவலரைத் தள்ளிவிட்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், ``சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரான ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய அபிராமிபுரம் காவல்துறையினர் தயங்குவது ஏன்? பாதிக்கபட்ட காவலர் தர்மனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், 154-வது பிரிவின் கீழ் ஏன் வழக்குப் பதியவில்லை'' என கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, 4-வாரத்துக்குள் அறிக்கை தர காவல் ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.