கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எம்.கே காலமானார்! | Veteran ML leader A.M.Kothandaraman passed away at 84

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/11/2018)

கடைசி தொடர்பு:19:20 (26/11/2018)

கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எம்.கே காலமானார்!

ஏ.எம்.கே. கம்யூனிஸ்ட்

நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த மார்க்ஸிய - லெனினிய கம்யூனிஸ்ட் அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான ஏ.எம்.கோதண்டராமன் நேற்று காலமானார். அவருக்கு வயது 84.  

சென்னையை அடுத்த தாம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

சி.பி.எம் கட்சியிலிருந்து பிரிந்து 1960-களின் கடைசியில், மார்க்ஸிய - லெனினிய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அதன் தமிழகத் தலைவர்களில் ஒருவராக உருவான ஏ.எம்.கோதண்டராமன், 1960-களில் சென்னை சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, சென்னையிலேயே வழக்கறிஞராகப் பயிற்சி செய்தார். கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, புதிய இளைஞர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் ஈர்க்கப்பட்டனர். அப்படி சி.பி.எம் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராக, அம்பத்தூர் தொழிற்பேட்டை அமைக்கப்பட்ட காலத்தில், பாடி முதல் ஆவடிவரையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மத்தியில் உருவான இளம் தொழிற்சங்கத் தலைவராக ஏ.எம்.கோதண்டராமனும் ஒருவர். 

பின்னர், 1969-ல் தோன்றிய புதிய மார்க்ஸிய - லெனினிய இயக்கத்தில் கோதண்டராமன் ஈடுபாடுகொண்டார். பகிரங்கமான தலைவராக இருந்த அவர், அவ்வியக்கத்தின் தீவிரப்போக்கால் தலைமறைவு வாழ்க்கைக்குப் போனார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. 

ஆனாலும் 70, 80-களில் தொழிற்சாலைகள் பரபரப்பாக இயங்கிய வடசென்னையில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார். மார்க்ஸிய- லெனினிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் `சமரன்’ என்ற பத்திரிகையின் மூலம் தீவிரமான அரசியல் கட்டுரைகளை எழுதினார். `செந்தாரகை’ எனும் இலக்கிய இதழைக் கொண்டுவந்ததிலும் அவரின் பங்கு இருந்தது. 

மூப்பின் காரணமாகவும் உடல்நலக் குறைவாலும் அண்மையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி இறந்துபோன ஏ.எம்.கோதண்டராமனின் உடல், வேலூர், காட்பாடியில் உள்ள அவரின் மகளின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மார்க்ஸிய - லெனினிய இயக்கத்தினரின் இறுதிமரியாதைக்குப் பின்னர், அவரின் உடல் எரியூட்டப்பட்டது.