வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (26/11/2018)

கடைசி தொடர்பு:19:24 (26/11/2018)

டெக்னாலஜி உதவியுடன் 68 பேர் மீட்பு... தீபத்திருவிழாவில் அசத்திய திருவண்ணாமலை போலீஸ்!

கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை வந்துசெல்வர். அப்படி இந்த வருடம் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் திருவண்ணாமலைக்கு வந்துசென்றிருக்கின்றனர். இவ்வளவு மக்களைக் கண்காணிப்பதும், கையாள்வதும் காவல்துறைக்கு சவாலான விஷயம். இதைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சாத்தியப்படுத்தியிருக்கிறது திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை. பார்க்கிங் பிரச்னையை சமாளிக்க ஆன்லைன் பார்க்கிங், கூட்டத்தில் தொலைந்துபோகும் நபர்களைக் கண்காணிக்க கணினியுடன் கூடிய பூத்துகள், கோயிலுக்குள் செல்லும் கூட்டத்தை நெறிப்படுத்த Crowd counting Visualization எனத் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தி, மக்களிடம் கைதட்டல் வாங்கியிருக்கிறது மாவட்ட காவல் துறை.

திருவண்ணாமலை காவல்துறை இணையம்

இந்த முயற்சிகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தியிடம் பேசினோம்.

"கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கான பார்க்கிங் வசதியை ஏற்படுத்தித்தருவது என்பது சிக்கலான பணி. அதைச் சமாளிப்பதற்காக ஆன்லைன் பார்க்கிங் முறையைக் கொண்டுவந்தோம். இதன்மூலம் ஆன்லைனிலேயே மொபைல் எண் கொடுத்து பார்க்கிங் இடத்தை ஒதுக்கீடு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

சிபிச்சக்கரவர்த்தி இடம் ஒதுக்கப்பட்டவுடன் மொபைலுக்கு PDF வடிவில் அனுமதிக் கடிதம் அனுப்பப்படும். அதை பிரின்ட்அவுட் எடுத்து காரில் ஒட்டிவிட்டால் போதும்; எந்தத் தடங்கலுமின்றி பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிடமுடியும். மொத்தம் 6 பார்க்கிங் ஸ்லாட்டுகளை இந்த முறை ஆன்லைனில் ஒதுக்கியிருந்தோம். அவை அனைத்தும் இரண்டே நாள்களில் முடிந்துவிட்டன. மொத்தம் 770 வாகனங்கள் இந்த முறையில் பார்க் செய்யப்பட்டன. இதற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வசதிக்காக http://www.tvmpournami.in என்ற தளத்தை வடிவமைத்திருந்தோம். இதிலேயே, கூட்டத்தில் தொலைந்துபோகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்காக childcare எனும் வசதியையும் சேர்த்திருந்தோம். இதன்மூலம் மொத்தம் 68 பேரை மீட்டு, அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். இதை செயல்படுத்துவதற்காக மொத்தம் 15 காவல்துறை பூத்துகளைக் கணினியுடன் அமைத்திருந்தோம். கூட்டத்தில் எங்கிருந்தாவது தொலைந்துபோன குழந்தைகள் இங்கே வந்தால், உடனே அவர்களின் விவரம் புகைப்படத்துடன் இணையத்தில் அப்லோடு செய்யப்படும். 

இதேபோல, பெற்றோர்கள் வேறு ஏதேனும் பூத்தில் தங்கள் குழந்தையைக் காணவில்லை எனப் புகார் செய்தால், இந்தத் தொலைந்துபோன குழந்தைகளோடு ஒப்பிட்டுப்பார்க்கப்படும். பின்னர், அந்தக் குழந்தை எந்த பூத்தில் இருக்கிறது எனக் கண்டறியப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். இந்தக் கண்காணிப்பு முறை மிகப் பெரிய அளவில் எங்களுக்கு கைகொடுத்தது. அதுவும் 68 பேரை மிக விரைவாக மீட்கமுடிந்தது வியப்பான விஷயம்.

மீட்கப்பட்டவர்கள்

இதேபோல, கோயிலுக்குள் செல்லும் மக்களை முறைப்படுத்துவதற்காகவும், நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் Crowd counting Visualization என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம். இதன்மூலம், கோயிலுக்குள் ஒரே நேரத்தில் எவ்வளவு பேர் வரை அனுமதிக்கலாம் என்பதைத் துல்லியமாக எங்களால் கணக்கிடமுடிந்தது. மொத்தம் 267 கேமராக்கள், 2 ட்ரோன்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கோயிலில் பணியிலிருந்த அனைத்து காவலர்களும் ஃபிங்கர் பிரின்ட் அட்டெண்டன்ஸ் முறையில் கண்காணிக்கப்பட்டனர். சுமார் 20 லட்சம் மக்கள் இந்த ஆண்டு வந்துசென்றுள்ளனர்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க