``திருட்டு நகை வாங்குகிறோமா?’’ - போலீஸுக்கு எதிராக நகை வியாபாரிகள் போர்க்கொடி | "Are we buying stealing jewelry?" - Jewelers who came out against the police.

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (26/11/2018)

கடைசி தொடர்பு:19:20 (26/11/2018)

``திருட்டு நகை வாங்குகிறோமா?’’ - போலீஸுக்கு எதிராக நகை வியாபாரிகள் போர்க்கொடி

தேனி மாவட்டம் சின்னமனூரில், தங்கம் வெள்ளி நகை வியாபாரிகள் நலச் சங்கம் காவல்துறையைக் கண்டித்து இன்று ஒரு நாள் கடை அடைப்புப் போராட்டம் நடத்தினர்.

நகை வியாபாரிகள்

தேனி மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக சின்னமனூரில் மட்டும் 90 நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கேரளா உட்பட வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேனி மாவட்டத்துக்கு வந்து நகை வாங்கிச் செல்வது வழக்கம். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருட்டு நகைகளை வாங்கி, வியாபாரம் செய்வதாகக் கூறி, தங்களைக் காவல்துறையினர் அச்சுறுத்திவருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

``வெளி ஊர்களில் இருந்து வரும் நகைகளை நாங்கள் வாங்குவதே இல்லை. இந்த நடைமுறை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாங்கள் பின்பற்றி வருகிறோம். அதைத் தெரிவிக்கும் நோட்டீஸ், ஒவ்வொரு நகைக்கடை சுவரிலும் ஒட்டப்பட்டிருக்கும். இந்நிலையில், திருட்டு நகைகளை வாங்குவதாகக் கூறி, காவல்துறையினர் எங்களை மிரட்டுவதும், திருடனை அழைத்து வந்து எங்களிடம் நகைகளைக் கொடுத்ததாகப் பொய்யாகக் கூற வைத்து எங்களை மிரட்டி நகைக்கான பணத்தை வாங்கிக்கொண்டு செல்வதும் அதிகரித்துவருகிறது. அது மட்டுமல்லாமல், விசாரணை என்ற பெயரில் மூன்று நான்கு நாள்கள் பிடித்துச் சென்று காவல்நிலையத்தில் காத்திருக்க வைத்து மன அழுத்ததைத் ஏற்படுத்துகிறார்கள்.

மேலும், வெளி மாவட்டக் காவல்துறையினரை அழைத்து வந்தும் மிரட்டுகிறார்கள். அந்த மாவட்டத்துக்கு விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்கள். செய்யாத குற்றத்துக்காக நாங்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். இதனால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் கெடுக்கிறார்கள் காவல்துறையினர். இதைக் கண்டித்து சின்னமனூர் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் நலச் சங்கம் சார்பாக ஒரு நாள் கடை அடைப்புப் போராட்டம் நடத்தினோம். பின்னர், காவல்துறையினரின் இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டக் காவல்கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தோம்" என்றார் சின்னமனூர் தங்கம் வெள்ளி நகை வியாபாரிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் அப்பாஸ்.