`திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொலை செய்தேன்' - போலீஸை அதிரவைத்த வேன் டிரைவர் வாக்குமூலம்! | women killed near kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (26/11/2018)

கடைசி தொடர்பு:19:40 (26/11/2018)

`திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொலை செய்தேன்' - போலீஸை அதிரவைத்த வேன் டிரைவர் வாக்குமூலம்!

திருமணத்துக்கு வலியுறுத்தியதால், காதலியை ஆற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபின்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் கீழ், கடந்த 21-ம் தேதி , அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் உடல் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது. அவரது உடல், குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காவல் துறை விசாரணையில், இறந்த இளம் பெண் படந்தாலுமூடு அருகே மஞ்சவிளை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் மகள் ஸ்ரீஜா (23) எனத் தெரியவந்தது. தேங்காய்ப்பட்டணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி நித்திரவிளையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலைசெய்துவந்தது தெரியவந்தது. இந்த நிலையில், நர்ஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஸ்ரீஜா-வின் மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புக்களை வைத்து விசாரணை நடத்தி மங்காடு பகுதியைச் சேர்ந்த விபின் (26) என்ற வேன் ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

 

அவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், "ஸ்ரீஜாவை நான் காதலித்துவந்தேன். அவரிடம் உல்லாசமாக இருக்க விரும்பியபோது சம்மதிக்காததால், மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தேன். ஐந்து மாதம் கற்பமான ஸ்ரீஜா தன்னைத் திருமணம் செய்யும்படி என்னிடம் வலியுறுத்தினார். நான் தட்டிக்கழித்ததால், காவல் துறையில் புகார் அளிக்கப்போவதாக என்னை மிரட்டினார். இதனால், கடந்த 20-ம் தேதி இரவு நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி ஸ்ரீஜாவை பைக்கில் அழைத்துச்சென்றேன். நள்ளிரவு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் மேல் அமர்ந்து இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். தாலி வாங்க பணம் இல்லை என நான் கூறியதால், கொலுசு மற்றும் பிரேஸ்லெட்டை கழற்றிக்கொடுத்தாள்.

விபின்

ஒரு போன் செய்ய வேண்டும் என மொபைல்போனை வாங்கிவிட்டு, அவளைத் தூக்கி ஆற்றில் போட்டேன். தொடர்ந்து செல்போன் மற்றும் நகைகளுடன் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்" என விபின் கூறியதாகக் காவலர்கள் தெரிவித்தனர். ஓட்டுநரான விபின், தனது  வேனில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவிகளைக் காதலிப்பதாக ஏமாற்றி  கற்பைச் சூறையாடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளார். இவ்வாறு உள்ளவர்களிடம் இருந்து தப்பிக்க பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்துக்குச் செல்லும்போது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.