`பெற்றோர்கள் கைவிட்ட எங்களை அரசு ஆதரிக்க வேண்டும்' - திருநங்கைகள் கோரிக்கை! | `The government should support us' - Transgenders needs houses

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (26/11/2018)

கடைசி தொடர்பு:21:30 (26/11/2018)

`பெற்றோர்கள் கைவிட்ட எங்களை அரசு ஆதரிக்க வேண்டும்' - திருநங்கைகள் கோரிக்கை!

திருநங்கைகள்

'பெற்றோரால் கைவிடப்பட்ட எங்களை அரசு ஆதரிக்க வேண்டும்' என திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடு, மாடுகளுக்குக்கூட இங்கு அடைக்கலம் உண்டு. காக்கை, குருவிகளுக்குக்கூட இங்கு  கூடுகள் உண்டு. ஆனால், திருநங்கைகளாகப் பிறந்த எங்களுக்கு அடைக்கலம் கொடுக்க யாருமில்லை. குடியிருக்க வாடகை வீடுகூட இல்லை. அரசுதான் நாங்கள் வாழ்வதற்கு வீடு கட்டித் தர வேண்டுமென சேலம் ஆட்சியர் அலுவலகப் படியேறியிருக்கிறார்கள், ஆத்தூர் திருநங்கைகள்.யாஷினி

இதுபற்றி திருநங்கை யாஷினி, ''நாங்களும் எல்லோரையும் போல பிறந்து, வளர்ந்து எங்களுக்குண்டான பாலின உணர்வோடு நடக்கும்போது,' திருநங்கைகள்' என்று முத்திரை குத்தி, குடும்பத்தாலும் உற்றார், உறவினர் மற்றும் சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்படுகிறோம். இதனால் பெற்ற தாய், தந்தையைக்கூட துறந்து தனிமையைத் தேடி வந்துவிடுகிறோம். நான் 18 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து 12 ஆண்டுகளாக ஆத்தூரில் இருக்கிறேன்.

ஆனால், நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு வீடு கிடையாது. எங்களுக்கு வாடகைக்குக்கூட யாரும் வீடு கொடுப்பதில்லை. சில கருணை உள்ளம் படைத்தவர்களின் உதவியால், அண்டிப் பிழைக்கக்கூடிய நிலை இருக்கிறது. சேலம் திருநங்கைகள் நலச் சங்கத்தின்மூலம் பல ஆண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு, கடந்த மாதம் ஆத்தூரை அடுத்த பைத்தூர் கிராமத்தில் 33 திருநங்கைகளுக்கு நிலங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த நிலங்களில், எங்களுக்கு பசுமை வீடு அல்லது பாரதப் பிரதமர் நிதியிலிருந்து தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து பெற்றோரால் கைவிடப்பட்ட எங்களை இந்த அரசாங்கம் ஆதரிக்க வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க