`நீங்களும் பசியாக இருப்பீர்கள்' - நிவாரணம் கொடுக்க வந்தவர்களை நெகிழ வைத்த பெண்மணி! | A women affected in cyclone, gave food to the peoples who came to deliver the relief products

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (26/11/2018)

கடைசி தொடர்பு:22:15 (26/11/2018)

`நீங்களும் பசியாக இருப்பீர்கள்' - நிவாரணம் கொடுக்க வந்தவர்களை நெகிழ வைத்த பெண்மணி!

நிவாரணப் பொருள்கள் கொடுக்க வந்தவர்களை தன் பாசத்தால் நெகிழ வைத்துள்ளார் வயதான பெண்மணி ஒருவர்.

டெல்டா மக்களின் வாழ்வாதாரங்களைக் குலைத்துப்போட்டிருக்கிறது கஜா புயல். தங்க வீடு, உண்ண உணவு என, அடிப்படைத் தேவையில் ஏதுமில்லாமல், அவர்கள் அன்றாட சராசரி வாழ்க்கையை வாழ முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றுவரை நமக்கு உணவு தர உழைத்த சோழ மண்டல மக்கள் இப்போது வீடிழந்து, வாழ்வாதாரம் இழந்து, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சகோதர்களுக்குக் கரம்கொடுத்து ஆறுதல் சொல்லி அரவணைக்க வேண்டிய தருணம் இது. பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உடனடித் தேவைகளையும், அடுத்தகட்டத் தேவைகளையும் நிறைவு செய்வதுதான் தலையாய கடமை. 

அந்தக் கடமையை அரசு செய்ய தவறினாலும், தமிழக மக்கள் திறம்பட செய்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான உதவிகள் சென்றுகொண்டிருக்கின்றன. நடிகர்கள், சாமானியர்கள், தன்னார்வலர்கள், பிரபலங்கள் எனப் பலரும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் நெகிழ வைக்கக்கூடிய உதவிகளைச் செய்து வருகின்றனர். அப்படி உதவி செய்ய வந்தவர்களை நெகிழ வைத்துள்ளார் திருவாரூர் பெண்மணி ஒருவர். திருவாரூர் அருகே சித்தாலப்பூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்தக் கிராமமும் கஜாவின் தாண்டவத்துக்குத் தப்பவில்லை. 

கணிசமான மக்கள் தொகை கொண்ட இந்தக் கிராமத்தில் இருந்த வசதிகள் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த மக்களுக்குப் புயல் பாதித்து இவ்வளவு நாள்கள் ஆகியும் எந்த உதவியும் அரசு சார்பில் இருந்து கிடைக்கவில்லை. இதை அறிந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் நிவாரணப் பொருள்களுடன் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்றவுடன் தாங்கள் கொண்டுவந்திருந்த நிவாரணப் பொருள்களை மக்களுக்கு அளித்துள்ளனர். 

பெண்மணி

அப்போது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அன்பு ராமகிருஷ்ணன் என்ற பெண்மணி, நிவாரண உதவிகள் செய்ய வந்தவர்களுக்கு உணவு அளித்தார். தான் கையில் வைத்திருந்த உணவுகளையும் பணத்தையும் வந்தவர்களுக்குக் கொடுத்த அந்தப் பெண்மணி, ``எங்கள் ஊருக்கு வந்து உதவிய உங்களுக்கு நாங்கள் என்ன கொடுத்துள்ளோம். நீங்களும் பசியாக இருப்பீர்கள். இதைச் சாப்பிடுங்கள்" எனக் கூறி அவர்களுக்கு உணவு பொட்டலத்தை அளித்தார். கூடவே, தான் வைத்திருந்த பணத்தையும் வந்திருந்தவர்களுக்கு அளித்தார். அவரைத் தொடர்ந்து கிராமத்தினர்களும் அவர்களை வலியுறுத்தி வந்திருந்தவர்களுக்கு அளித்தனர். நிவாரணப் பொருள்களை கொடுக்க வந்தவர்களுக்குச் சாப்பிட்டு போகச் சொல்லி பணமும், சாப்பாடும் அளித்த கிராம மக்களின் செயலால் வந்திருந்தவர்களை நெகிழச் செய்தது. சோழநாடு சோறுடைத்து என்று சும்மாவா சொன்னார்கள்..! 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க