போலீஸ் வாகனம் விபத்து - முருகன், கருப்பசாமி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் சந்தேகம் | murugan and karuppasami life was as risk, says relatives

வெளியிடப்பட்ட நேரம்: 00:01 (27/11/2018)

கடைசி தொடர்பு:07:14 (27/11/2018)

போலீஸ் வாகனம் விபத்து - முருகன், கருப்பசாமி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் சந்தேகம்

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றது தொடர்பான வழக்கில் ஆஜராகிவிட்டு முருகன் மற்றும் கருப்பசாமி மதுரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் வந்த போலீஸ் வாகனத்தை டாடா ஏஸ் வாகனம் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விபத்துக்குள்ளான முருகன், கருப்பசாமி பயணம் செய்த வாகனம்

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் வழிநடத்த முயன்ற புகாரில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப்பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் மதுரை சிறையில் இருந்து வருகின்றனர்.

அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக நிர்மலாதேவி ஒரு வாகனத்திலும், முருகன், கருப்பசாமி மற்றொரு போலீஸ் வாகனத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். அதுபோல் நேற்று ஆஜராகிவிட்டு மதுரைக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணன்கோயில் அருகே எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம், போலீஸ் வாகனத்தைப் பக்கவாட்டில் உரசி விபத்தை ஏற்படுத்தியது. இதனால் வாகனத்துக்குள் இருந்த முருகனும் கருப்பசாமியும் பதறிப் போனார்கள். அதன் பின்பு, உடன் வந்த காவலர்கள் வாகனத்தை விட்டு இறங்கி வாகனத்தைச் சோதனை செய்தனர். பின்பு டாடா ஏஸ் ஓட்டி வந்த ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர். நீங்கள்தான் தவறாக வந்தீர்கள் என்று டாடா ஏஸ் ஓட்டுநர் சத்தம் போட ஆரம்பித்தார். பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இது பற்றி நம்மிடம் பேசிய முருகனின் உறவினர் சுவிதா, ``நீதிமன்றத்தில் எங்க மாமாவைப் பார்த்து விட்டு அவர்கள் போலீஸ் வேனில்  கிளம்பிச் சென்ற பின்பு காரில் நாங்கள் மதுரைக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது கிருஷ்ணன் கோயில் அருகே மாமா சென்ற போலீஸ் வேன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அருகில் சென்று பார்த்தபோதுதான்,  விபத்து நடந்தது  தெரிந்தது. நிர்மலாதேவி வழக்கில் பொய்யாக சேர்த்துள்ள நிலையில், ஏற்கெனவே உயிருக்கு ஆபத்து இருப்பதாக என் மாமா கூறி வருகிறார். இந்த விபத்தைப் பார்க்கும்போது அது உண்மைதான் என்பதுபோல உள்ளது. அது மட்டுமில்லாமல் உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஜாமீனுக்கு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், ஜாமீன் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதைக் காவல்துறையும், நீதித்துறையும் விசாரிக்க வேண்டும்" என்றார்.

இந்த விபத்து தொடர்பாக சிறைத்துறையினர் எந்த விளக்கத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க