``கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்!" - மத்திய அரசுக்கு தம்பிதுரை வேண்டுகோள் | "The central government must declare Gaja storm as national disaster!" -says thambidurai!

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (27/11/2018)

கடைசி தொடர்பு:07:17 (27/11/2018)

``கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்!" - மத்திய அரசுக்கு தம்பிதுரை வேண்டுகோள்

``தமிழகத்தில் டெல்டாவை புரட்டிப் போட்டிருக்கும் கஜா புயலை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேட்டுக்கொண்டார்.

 thambidurai

கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட மூர்த்திபாளையம், அய்யம்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மண்மங்கலம் வட்டாட்சியர், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், வருவாய்த் துறை அலுவலர்கள், அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, ``கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை முழுமையாகவும், திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களைப் பகுதியாகவும் பாதித்துள்ளது. கஜா புயல் ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைச் சரி செய்ய அரசுக்கு நிதி வேண்டும். இவற்றை ஓரிரு நாளில் சரிசெய்ய முடியாது, அதற்கு நீண்ட நாள்கள் தேவைப்படுகிறது. எனவே, மத்திய அரசு கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்று, ஒரு புயல் தமிழகத்தைத் தாக்கியது இல்லை. சுனாமி உயிர் தேசத்தை உண்டாக்கியது. ஆனால், கஜா புயல் அதிக பொருள் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. கஜா என்றால் யானை எனப் பொருள். அதுபோலவே வாழைத்தோட்டம், தென்னை தோப்பு உள்ளிட்டவற்றை தும்சம் செய்துவிட்டது. இதற்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட 15,000 கோடி ரூபாய் குறைவானது என்கிறார்கள். ஆனால், தமிழக அரசு கேட்ட நிதி ஆரம்ப கட்ட நிதிதான். தற்போது பாதிப்புகளை அளவிடும்போது கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. அதனால், தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்படும்" என்றார்.