வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (27/11/2018)

கடைசி தொடர்பு:07:24 (27/11/2018)

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீன்பிடித் தொழிற்சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி, ரூபின்ஸ்டன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், வினோதன், பாக்கியம் ஆகிய 8 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை  எடுக்கப்படும் எனக் கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை அரசு இயற்றிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு, தலா ரூ.60 லட்சம் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும்  விதித்துத் தீர்ப்பளித்தது இலங்கை கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றம்.

இதை எதிர்த்தும், மீனவர்களையும் படகுகளையும் மீட்டுத்தர வலியுறுத்தியும் மீனவர்களின் உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த 8 மீனவர்களும்  இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், மீனவர்களை விடுவிக்க  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ., மீன்பிடித் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சி.ஐ.டி.யு., மீன்பிடித் தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் செந்தில்வேல், ``உலகின் எந்த நாடும்  போடாத  கடல் சட்டத்தை இலங்கை அரசு இயற்றி உள்ளது. இதன்படி இலங்கைச் சிறையில் வாடும், தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். மீனவர்களை விடுவிக்க, இலங்கையில் வழக்கு நடத்தி அதற்கான செலவுகளை  மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு ராஜ்ஜிய ரீதியாக இந்தப் பிரச்னையில் முடிவு எடுக்க வேண்டும். சிறையில் இருக்கும், மீனவர்களுக்கு, முறையாக நிவாரணம் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதில், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்துகொண்டு மீனவர்களை விடுதலை செய்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க