நிவாரணப் பொருள்களுடன் நாகை வந்த சரத்குமார் - தமிமுன் அன்சாரியிடம் வழங்கினார்! | sarathkumar provides relief products to Nagapattinam district peoples

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

கடைசி தொடர்பு:07:28 (27/11/2018)

நிவாரணப் பொருள்களுடன் நாகை வந்த சரத்குமார் - தமிமுன் அன்சாரியிடம் வழங்கினார்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  `கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான  நிவாரணப் பொருட்களுடன் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அலுவலகத்துக்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வருகை தந்தார்.

நிவாரணபொருள்கள்

சரத்குமாரை வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விவரித்தார். அதைத்தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தான் கொண்டு வந்த 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை நாகை மாவட்டம் முழுவதும் விநியோகிக்குமாறு தமிமுன் அன்சாரியிடம் ஒப்படைத்தார்.

சரத்குமார் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை நாகை, கீழ்வேளுர், வேதாரண்யம் தொகுதிகளுக்கு மூன்றாகப் பிரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர், தமிமுன் அன்சாரி மற்றும் சரத்குமார் தங்கள் மீட்புக் குழுவினரோடு நம்பியார் நகர் மீனவப் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களைச் சந்தித்தனர்.

சரத்குமார்

நம்பியார் நகர் பகுதியில் ரூ.36 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முயற்சி நடைபெறுவதாகவும், அதில் ஒரு பங்கை இப்பகுதி மக்கள் தருவதாகவும் தமிமுன் அன்சாரி, சரத்குமாரிடம்  கூறினார். இதைத்தொடர்ந்து நம்பியார் நகர் மீனவ மக்களிடம் பேசிய சரத்குமார், தானும்  50 லட்சம் ரூபாய் நன்கொடையாகத் தருவதாகவும், அதை 6 மாதத்துக்குள், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியிடம் ஒப்படைப்பதாகவும் உறுதி அளித்தார். சரத்குமாரின் இந்த அறிவிப்புக்கு அங்கு கூடியிருந்த மக்கள் இருவரையும் வாழ்த்தி முழக்கமிட்டு, நன்றிகளைத் தெரிவித்தனர்.