`புயல் நிவாரண நிதி; உண்டியல் பணத்தை வழங்கிய பள்ளி மாணவன்!’- பாராட்டிய ஆட்சியர்! | The 2nd class student who gave the money to the relief fund for the Ghaja cyclone

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (27/11/2018)

கடைசி தொடர்பு:11:10 (27/11/2018)

`புயல் நிவாரண நிதி; உண்டியல் பணத்தை வழங்கிய பள்ளி மாணவன்!’- பாராட்டிய ஆட்சியர்!

கஜா புயல் நிவாரண நிதிக்காக உண்டியலில் சேர்த்து வைத்த ரூ.2,000-க்கும் மேற்பட்ட பணத்தை வழங்கிய 2-ம் வகுப்பு மாணவன் யோகேஷ் ராமை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பாராட்டினார்.

கஜா புயல்

கஜா புயல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. இதனால், வீடுகள், கால்நடைகள், விளைபொருள்களை இழந்து மக்கள் உணவு, தண்ணீருக்காக தவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். அரசும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவைகளை சரி செய்து வருகிறது. இதனால் மெள்ள மெள்ள மீண்டு வருகின்றனர் டெல்டா மாவட்ட மக்கள்.

இந்த நிலையில், தூத்துக்குடி உள்ள ஏ.வி.எஸ்., தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் முத்தையாபுரத்தைச் சேர்ந்த யோகேஷ் ராம் என்ற மாணவன், தன் தாயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ.2,000-க்கும் மேற்பட்ட பணத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கஜா புயல் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்புத் தொகையாக அளித்தார். அந்த மாணவனை கை குலுக்கி தோளைத் தட்டிப் பாராட்டினார் ஆட்சியர்.

மாணவன் யோகேஷ் ராமிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ``கஜா புயல் அடிச்சதுனால வீடு இடிஞ்சு கஷ்டப்படுற அந்த மக்களைப் பார்த்தேன். அந்த மக்களுக்கு உதவணும்னு நினைச்சேன். திண்பண்டம் வாங்கிச் சாப்பிட கிடைக்கும் காசுல கொஞ்சத்தை உண்டியலில் சேமிச்சுட்டு வர்றேன். அந்தப் பணத்துடன் உறவினர்கள், பக்கத்து வீடு, தெருவில் உள்ள பழக்கமானவர்களிடமும் இந்த உண்டியலில் காசு சேர்த்தேன். எவ்வளவு இருக்குன்னு கூட எண்ணிப் பார்க்கலை. எப்படியும் ரெண்டாயிரம்  ரூபாய்க்கு மேலதான் இருக்கும். என்னைப் போல எல்லா மாணவர்களும் தங்களின் உண்டியல் பணம், சேமிப்பு பணத்தை கொடுக்க முன் வரணும்.” என்றார் மழலைக் குரலில். 2-ம் வகுப்பு மாணவனின் மனித நேயமிக்க இந்தச் செயலை அனைவரும் பாராட்டினார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க