`மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை!’ - ஏழு பேர் விடுதலையில் அதிர்ச்சித் தகவல் | center dont have any right to release rajiv gandhi convicts

வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (27/11/2018)

கடைசி தொடர்பு:13:32 (27/11/2018)

`மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை!’ - ஏழு பேர் விடுதலையில் அதிர்ச்சித் தகவல்

சி.பி.ஐ விசாரித்த வழக்குகளில் மாநில அரசின் முடிவைத் தடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. 

பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த 7 பேருக்கும் ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன. இதையடுத்து, ஏழுபேரின் விடுதலைத் தொடர்பான வழக்கில் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம் என சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனிடையே தமிழக அரசு சார்பிலும் 7 பேரின் குடும்பங்கள் சார்பிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இவர்கள் இல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் இவர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே ஏழு பேர் விடுதலைத் தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது என்ற செய்திகளும் அவ்வப்போது வெளிவந்தன. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஆர்.டி.ஐ-யின் பதில். முன்னதாக தன் விடுதலைத் தொடர்பாக சில தகவல்களை அறிந்துகொள்ளப் பேரறிவாளன் தரப்பில் இருந்து ஆர்.டி.ஐ மூலம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதன் ஒவ்வொரு விளக்கமும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.

7 பேர் விடுதலைத் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், தமிழக அரசு எழுதிய கடிதம் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லவில்லை அதை மத்திய அரசே நிராகரித்து விட்டது என்ற தகவல் சில தினங்களுக்கு முன்னர் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து இதேபோன்று மற்றொரு தகவலும் தற்போது ஆர்.டி.ஐ மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், குற்ற விசாரணை சட்டப் பிரிவு 432 முதல் 435-ன்படி குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு அரசு விதித்துள்ள விதிகளின் நகல் வேண்டும் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விசாரணை அமைப்புகள், விசாரணை நடத்திய வழக்குகளில் மாநில அரசின் முடிவைத் தடுக்கும் மத்திய அரசின் விதிகள் என்ன? தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்களின் நகல் போன்றவை கேட்கப்பட்டிருந்தன. 

இந்தக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் சொல்லாத நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய தகவல் ஆணையத்தில் பேரறிவாளன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிறகு 2018 ஜூலை மாதம் காணொலி மூலம் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை மத்திய தகவல் ஆணையர் முன் கோரிக்கையாக முன்வைத்தார் பேரறிவாளன். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஆணையர், பேரறிவாளன் கேட்ட அனைத்துத் தகவல்களையும் வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். 

பிறகு ஆர்.டி.ஐ மூலம் வெளியான தகவலில் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது தொடர்பாகவோ, தண்டனையைக் குறைப்பதில் மாநில அரசின் முடிவைத் தடுக்கும் எந்த விதியும், உரிமையும் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 ஆண்டுகளாகக் குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும், அது தொகுக்கப்பட்டவுடன் விரைவில் வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதிலிருந்து ஏழு பேர் விடுதலையில் மாநில அரசின் முடிவைத் தடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை எனத் தெளிவாகியுள்ளது.