`அன்றைய இரவு நான் குடிக்கவில்லை’ - போலீஸ் குற்றச்சாட்டுக்கு காயத்ரி் ரகுராம் விளக்கம் | actress gayathri raguram explain about her controversy

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (27/11/2018)

கடைசி தொடர்பு:15:27 (27/11/2018)

`அன்றைய இரவு நான் குடிக்கவில்லை’ - போலீஸ் குற்றச்சாட்டுக்கு காயத்ரி் ரகுராம் விளக்கம்

‘நான் குடி போதையில் இல்லை. என்னை யாரோ குறி வைத்து இதுபோன்ற தகவல்களை வெளியிடுகிறார்கள்’ என நடிகை காயத்ரி ரகுராம் விளக்கமளித்துள்ளார். 

காயத்ரி ரகுராம்

சென்னை அடையாறு திரு.வி.க பாலம் அருகில் போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்ததாகவும் அதில் நடிகை காயத்ரி ரகுராம் குடி போதையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. பிறகு நடிகை மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவருக்கு ரூ.3,500 அபராதம் விதித்து காரில் இருந்த நடிகையை காவலர்களே வீட்டில் இறக்கிவிட்டனர் எனத் தகவல்கள் வெளியானது. 

இதற்கு காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், `` நான் நன்றாக இருக்கிறேன். என் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து எனக்கு வருத்தம் இல்லை. யாரோ என்னைப் பழிவாங்குகிறார்கள். அது யாரென்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பற்றி என்ன பேசினாலும் எனக்குக் கவலை இல்லை. நான் தவறாக நடந்திருந்தால் அதை நானே ஒப்புக்கொள்வேன். அன்றைய தினம் என்ன நடந்தது என்று எனக்கும், என் தாய்க்கும், என் உடனிருந்தவர்களுக்கும் தெரியும். காவலர்கள் யாரும் என்னை வீட்டில் விடவில்லை. நான் குடி போதையிலும் வரவில்லை. அனைவரும் என்னைப் புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். ஏன் என்னைக் குறிவைக்கிறார்கள் என்பதுகுறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாகக் கேட்டிருக்கலாம். 

அன்று இரவு நான் ஷூட்டிங் முடித்துவிட்டு என் சக நடிகைகளுடன் வந்துகொண்டிருந்தேன். நள்ளிரவு நான்தான் அவர்களை வீட்டில் விட்டேன். நான் தப்பு செய்திருந்தால் அதை ஒப்புக்கொள்ள எனக்கு பயம் இல்லை. என் மீது தவறு இல்லாதபோது என்னைக் குறை கூறுவது சரியானது அல்ல. என்ன நடந்தது என்பது குறித்து ஊடகங்கள் என்னிடம் ஒரு முறை கேட்டிருக்கலாம் அல்லது என்னுடன் இருந்தவர்களிடமாவது கேட்டிருக்கலாம். பா.ஜ.க-வில் இருக்கும் சிலருக்கே என்னைப் பிடிக்காது. நான் வளர்ந்து வருவதால் அவர்களில் சிலருக்கும் என்னைப் பிடிக்காது. இது சரியான வழி இல்லை. நீங்கள் அனைவரும் வளர்ந்தால் நான் சந்தோஷப்படுவேன். ஆனால், மற்றவர்கள் முதுகில் குத்தாதீர். நான் குடி போதையில் இருந்தேன் என்பதற்கு எந்த சாட்சியங்களும் இல்லை. ஏதோ ஒரு வீடியோவை வைத்து அது நான்தான் எனக் கூறவேண்டாம். அன்றைய இரவு நான் குடிக்கவில்லை. எனக்கு சில மெடிக்கல் பிரச்னைகள் உள்ளது. அம்மா மாலை அணிந்திருக்கிறார்கள். அப்படியிருக்க நான் எப்படி குடிக்க முடியும். நான் ரத்தப் பரிசோதனை செய்யவும் தயாராக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.