மகளின் திருமண அழைப்பிதழுடன் ராமேஸ்வரம் கோயிலில் முகேஷ் அம்பானி தரிசனம்! | Mukesh Ambani visits Rameswaram temple

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (27/11/2018)

கடைசி தொடர்பு:17:54 (27/11/2018)

மகளின் திருமண அழைப்பிதழுடன் ராமேஸ்வரம் கோயிலில் முகேஷ் அம்பானி தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி இன்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த வழிபாட்டின்போது தனது மகளின் திருமண அழைப்பிதழை முக்கிய சந்நிதிகளில் வைத்து பிரார்த்தனைசெய்தார். 

முகேஷ் அம்பானி ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை
 

இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இஷா அம்பானியின் திருமணம், டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தனது மகளின் திருமண அழைப்பிதழை முக்கியக் கோயில்களின் சந்நிதிகளில் வைத்து வழிபட்டு வருகிறார். இன்று காலை திருப்பதி சென்ற அவர், அங்கு சாமி சந்நிதியில் திருமண அழைப்பிதழை வைத்து ஏழுமலையானை வணங்கினார்.  இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக, தனி ஹெலிகாப்டர் மூலம் மண்டபத்துக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் வந்த அவர், அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார்.

கோயிலில், இணை ஆணையர் மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் முகேஷ் அம்பானிக்கு வரவேற்பளித்தனர்.  அதன் பின், நந்திமண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னிதி, மூலவரான ராமநாதசுவாமி சந்நிதி, பர்வதவர்த்தினி அம்பாள் சந்நிதி ஆகியவற்றில் தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து சிறப்பு வழிபாடுசெய்தார். இதைத் தொடர்ந்து, கோயிலுக்கு ரூ.55 ஆயிரம் காணிக்கையாக வழங்கினார்.

கோயில் தரிசனம் முடிந்த பின், மீண்டும் கார் மூலம் மண்டபம் சென்ற முகேஷ் அம்பானியின் வருகையை முன்னிட்டு, மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கு தளம் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.