வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (27/11/2018)

கடைசி தொடர்பு:17:24 (27/11/2018)

`ஆணவக் கொலைகளுக்கு ராமதாஸே காரணம்!’ - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆணவக்கொலைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸே காரணம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று மதுரை வந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகிறோம்.

கிருஷ்ணசாமி

எஸ்.சி பட்டியலில் வைக்கப்பட்டதால் நன்மைகளைவிட இழந்ததுதான் அதிகம். நான் ஒவ்வொரு மாவட்டமாக எங்கள் மக்களை சந்தித்து வருகிறேன். அனைவரும் பட்டியலிலிருந்து வெளியேற வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மத்திய- மாநில அரசுகள் இதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும். இதனால் அரசுகளுக்கு எந்த நிதிச்சுமையும் ஏற்படாது'' என்றவர்,

ஆணவக் கொலைகள் பற்றிய கேள்விக்கு, ``கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பின் ஆணவக் கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. காதல் என்பது இயல்பாக வரக்கூடியது. யாரும் சாதி பார்த்து காதல் செய்வதில்லை. அதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொல்வதென்பது கொடூரமானது. இதற்கு, சில வருடங்களுக்கு முன் மாவட்ட வாரியாக டாக்டர் ராமதாஸ் நடத்திய சாதி ரீதியான ரகசியக் கூட்டங்கள்தான் காரணம். இதற்கொரு விசாரணைக் கமிஷன் வைத்தால் பல உண்மைகள் தெரியவரும். தேர்தல் கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்'' என்றார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க