ராமநாதபுரத்திலிருந்து டெல்டாவுக்குச் சென்ற ரூ.32 லட்சம் நிவாரணப் பொருள்கள்! | Ramanathapuram education department sends relief aid for the victims of the Gaja cyclone

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (27/11/2018)

கடைசி தொடர்பு:18:10 (27/11/2018)

ராமநாதபுரத்திலிருந்து டெல்டாவுக்குச் சென்ற ரூ.32 லட்சம் நிவாரணப் பொருள்கள்!

கஜா புயல் பேரழிவால் அவதியுற்று உள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று மேலும் 32 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நிவாரணப் பொருள்கள்
 

கடந்த 16-ம் தேதி வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்கள் பேரழிவில் சிக்கின. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் வாழ்வாதாரங்களையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களின் இன்னலைப் போக்க மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார்கள். 

ராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில் ஏற்கெனவே பல கட்டங்களாக ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் மாவட்டக் கல்வித்துறையின் சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.31.6 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று வாகனங்களில் அனுப்பி வைத்தார். இதேபோல் ராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் மற்றும் அனைத்து செய்தியாளர்கள் சார்பில் 70 குடும்பங்களுக்குத் தேவையான  ரூ.25,000 மதிப்புடைய அரிசி, மளிகைப் பொருள்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், ராமநாதபுரம் செய்தியாளர் சங்க நிர்வாகிகள் தனபால், வால்டர் ஸ்காட், ரமேஷ், மகேஷ், குமார் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.