ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்! - அச்சாரம் போட்டாரா தினகரன்? | Thiruma meet stalin

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (27/11/2018)

கடைசி தொடர்பு:17:40 (27/11/2018)

ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்! - அச்சாரம் போட்டாரா தினகரன்?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கும், நேற்றைய டி.டி.வி.தினகரனுடனான திருமாவளவன் சந்திப்புக்கும் தொடர்பிருப்பதாகக் கூறுகின்றனர் தி.மு.க-வினர்.

ஸ்டாலின் திருமா


திருவாரூர் இடைத்தேர்தல், பிப்ரவரிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான தேர்தலை கஜா புயலின் பாதிப்புகளைக் காரணம் காட்டி, நாடாளுமன்ற தேர்தலுடனே சேர்ந்து நடத்த ஆளும்தரப்பு முடிவெடுத்துள்ளது. இதற்காகத் தேர்தல் ஆணையத்தையும் நாடுகிறது அ.தி.மு.க. இது ஒருவகையில் தி.மு.க-வுக்கும் சாதகமான முடிவுதான். காரணம், இடைத்தேர்தலை நடந்த தி.மு.க-வும் விரும்பவில்லை. இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதே அவர்களின் கணிப்பு. திராவிட கட்சிகளின் அடுத்த நகர்வுகள் அனைத்தும் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கித்தான் முன்னெடுக்கப்படுகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதில் அ.தி.மு.க சுணக்கம் காட்டிவரும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது பலத்தை நிரூபித்தே ஆகவேண்டும் என்று முழுமூச்சில் களமிறங்கியுள்ளது தி.மு.க. இருந்தபோதிலும், கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியிலே உள்ளது. காங்கிரஸ் தரப்பில் 9 சீட்டுகள் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

டிடிவி தினகரன்

 

ஆனால், இதற்கு தி.மு.க தரப்பில் கிரீன் சிக்னல் விழுந்தபாடில்லை. `மற்ற  கட்சிகளுக்கு அதிக இடங்களைத் தருவதே நம் தோல்விக்குக் காரணம்'  என தி.மு.க-வினர் தெரிவித்துவருவதால், சீட்டுகளை ஒதுக்குவதில் தலைமை கறார் காட்டிவருகிறது. டிசம்பர் 16-ம் தேதி கருணாநிதி சிலை திறப்புக்கு சென்னை வரும் சோனியா காந்தி, காங்கிரஸுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்வார் என தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், துரைமுருகன் பேட்டி மற்ற கூட்டணிக் கட்சிகளை ஆட்டம் காணச் செய்துள்ளது. வந்தாலும் ஓகே! வரவில்லையென்றாலும் கவலையில்லை என்ற நிலைபாட்டில்தான் தி.மு.க உள்ளது. இந்நிலையில், இன்று மு.க.ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில்,``கூட்டணிகுறித்து ஆரம்பத்திலிருந்தே ம.தி.மு.க-வும் வி.சி.க-வுக்கும் பிடிப்பு இல்லாத நிலை இருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நீண்டுகொண்டேதான் உள்ளது. இப்படியிருக்க, நேற்று தினகரனை திருமா சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு எதார்த்தமானதாக இருந்தாலும், இது தலைமைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருமா-வின் நிலைபாடுகுறித்து அறிந்துகொள்ள ஸ்டாலின் தரப்பில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, சந்திப்பு அரங்கேறியுள்ளது. இதில், கூட்டணிகுறித்தும் பேசப்பட்டுள்ளது. விரைவில் வி.சி.க-வை சேர்க்கும் முயற்சியில் தி.மு.க கிரீன் சிக்னல் காட்டும்'' என்கின்றனர் தி.மு.க-வினர்.