அவகாசம் வழங்குகிறோம்; தொய்வு ஏற்பட்டால்... தமிழக அரசை எச்சரித்த நீதிபதிகள் | madurai high court warns tamilnadu government

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (27/11/2018)

கடைசி தொடர்பு:18:35 (27/11/2018)

அவகாசம் வழங்குகிறோம்; தொய்வு ஏற்பட்டால்... தமிழக அரசை எச்சரித்த நீதிபதிகள்

தமிழகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளாக சிக்குன்குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் பொதுமக்களை அச்சப்படுத்திவருகிறது. இதுபோன்ற காய்ச்சல்கள் உயிரைப் பறிக்கும் அளவுக்கு தனது வீரியத்தைக் காட்டுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காய்ச்சல்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ``தமிழகத்தில் தற்போது டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட உயிரைப் பாதிக்கும் காய்ச்சல்கள் அதி தீவிரமாகப் பரவிவருகிறது. இதுபோன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில்  டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்து மாத்திரைகள், சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை கேட்டனர். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விரைவாக கட்டுப்படுத்தப்பட்டு இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார். மேலும்,  சுகாதாரத் துறை அதிகாரிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், பதில் மனு தாக்கல்செய்ய கால அவகாசம் வேண்டும் என்றார்.

இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், கஜா புயல் நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் அவகாசம் வழங்குகிறோம்.  ஆனால், தொய்வு ஏற்படாமல் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  மேலும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது என்று பாராட்டிய நீதிபதிகள், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினர்.