எங்கள் பெயரைப் புறக்கணிக்கலாமா? - பெரியார் பல்கலைக்கழக சர்ச்சை | Periyar University invitation letter from the professors and students

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (27/11/2018)

கடைசி தொடர்பு:19:10 (27/11/2018)

எங்கள் பெயரைப் புறக்கணிக்கலாமா? - பெரியார் பல்கலைக்கழக சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின்  18-வது பட்டமளிப்பு விழா, தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், விழா அழைப்பிதழில் பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என்ற வாசகம் இடம் பெறாமல் அச்சிட்டிருப்பதால், அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள்.

இதுபற்றி பல்கலைக்கழக ஊழியர்களிடம் பேசியபோது, ''ஒரு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் முக்கியம். பொதுவாக, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் என்பவர்கள், பல்கலைக்கழகத்தின் தூண்களாகக் கருதப்படுகிறார்கள். ஒவ்வொரு வருட பட்டமளிப்பு விழாவின்போதும் அழைப்பிதழில் இவர்களின் பெயர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதற்காகவே, விழாவிற்கு முன்னதாக பல குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடைய நேரடி கண்காணிப்பிலேயே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெறும்.

இந்த ஆண்டு, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகள், கடந்த 15 நாள்களுக்கு முன்பே தொடங்கியது. விழாவில் எந்த ஒரு தவறும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, 31 குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுக்களில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வேண்டப்பட்டவருக்கு, ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் வழக்கமாக இடம்பெறும் பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்  என்ற வாசகம் இடம் பெறாமல் புறக்கணித்துவிட்டார்கள். இது, அந்தக் குழுவின் கவனக்குறைவால் நடந்ததா, இல்லை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. எங்கள் பெயர் இடம் பெறாமல் இருப்பது பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநர் மாளிகையும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது'' என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க