நடிகர்கள் வேடத்தில் வீதியில் நடனம்! - கஜா புயலுக்கு நிவாரணம் திரட்டும் கலைஞர்கள்! | street dancers are collecting money by performing art to help cyclone hit area

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (27/11/2018)

கடைசி தொடர்பு:19:30 (27/11/2018)

நடிகர்கள் வேடத்தில் வீதியில் நடனம்! - கஜா புயலுக்கு நிவாரணம் திரட்டும் கலைஞர்கள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள்போல் வேடமிட்டு முக்கிய வீதிகளில் நடனமாடி, மேடை நடனக் கலைஞர்கள் நிவாரண நிதி திரட்டினார்கள். 

வீதியில் நடனம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்குத் தமிழக அரசுடன் இணைந்து நிவாரண உதவிகளை பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், சமூக நல அமைப்பினர், அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களிலும் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. புயலின் கோரத் தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கிய மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். புயலால் விவசாயிகள், மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வேதனையில் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் நெல்லை மாவட்ட மேடை நடனக் கலைஞர்கள், நடிகர்கள் வேடமிட்டு நடன நிகழ்ச்சிகளை நடத்தி நிதி வசூலித்து வருகிறார்கள்.

இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி பெற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் அவர்கள், அந்த நிதியைப் பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர். பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில், திரைப்பட நடிகர்கள், அரசியல் தலைவர்களின் வேடம் அணிந்து நிவாரண நிதி திரட்டி வருகின்றனர். அவர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. 

நடிகர்கள் வேடத்தில் நிதி திரட்டல்

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, மேடை நடனக்கலைஞர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி வேடம் அணிந்து திரைப் பாடல்களுக்கு நடனமாடினார்கள். பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் ஆர்வத்துடன் நிதி உதவி செய்தனர். இதே போல, நெல்லை மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் நான்கு நாள்களுக்கு நிதி திரட்டும் திட்டத்துடன் நடனக் கலைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இது குறித்து நெல்லை மாவட்ட மேடை நடனக்கலைஞர் சங்கத்தின் செயலாளரான செல்வராஜ் கூறுகையில், ``புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது வகையில் உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் எங்க சங்கத்தின் நிர்வாகிகளோடு சேர்ந்து பேசியபோது, நமக்குத் தெரிந்த கலை நிகழ்ச்சியை நடத்தி நிதி திரட்டுவோம் எனத் தெரிவித்தார்கள். உடனே காவல்துறையினரிடம் சென்று முறைப்படி அனுமதி கேட்டோம். அவர்களும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்து நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதித்தார்கள்.

அதனால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் வேடங்களுடன் நெல்லை நகரம் முழுவதும் 4 நாள்களுக்கு நடன நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அதில் வசூலாகும் தொகையைக் கொண்டு புயல் பாதித்த மக்களுக்குத் தேவையான உதவிப் பொருள்களை வாங்கிச் சென்று அவர்களுக்கு வழங்குவோம். அத்துடன், நாங்களும் அங்கேயே தங்கியிருந்து நிவாரண உதவிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.