தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 3-ம் கட்ட விசாரணையைத் தொடங்கியது சிபிஐ | CBI starts their 3rd enquiry on thoothukudi gunfire

வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (27/11/2018)

கடைசி தொடர்பு:21:25 (27/11/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 3-ம் கட்ட விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் சிபிஐ அதிகாரிகள், மூன்றாவது கட்டமாக துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி, கடந்த மே-22ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது.  அதில், போலீஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை நியமித்தது.  இந்த ஆணையம், கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரையிலும் 5 கட்டமாக 87 பேரிடம் விசாரணை  நடத்தி முடித்துள்ளது. 6-வது கட்ட விசாரணை வரும் டிசம்பர் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது.

இந்த கலவரச் சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில், முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, 5 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல, 243 வழக்குகளில் சிப்காட் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட 173 வழக்குகளும் ஒரே வழக்காகப் மாற்றப்பட்டது. தொடர்ந்து, சிபிசிஐடி, ஏடிஎஸ்பி, மாரிராஜா தலைமையிலான குழுவினர் விசாரணையை நடத்திவந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பந்தமான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 15-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரணைசெய்த நீதிபதிகள், இச்சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டனர். இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில், துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற எல்லைகளுக்கு உட்பட்ட தென்பாகம், மத்தியபாகம் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று, இதுதொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் பல்வேறு ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கி நடத்திவருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வை மேற்கொண்டனர். தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம்குறித்த வழக்கு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் தற்காலிக முகாம் அலுவலகமும்  அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்குறித்து பொதுமக்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் புகார் மனுக்களை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறை பேக்-அப் களாக மாற்றி, சிபிஐ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுவருகின்றன. தற்போது, மூன்றாவது கட்டமாக துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அடுத்ததாக, இச்சம்பவம் தொடர்பாகவும், இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் கருதப்படும் வியாபாரிகள் சங்கம், வீராங்கனை அமைப்பு, மீனவர்கள் சங்கம் உள்ளிட்ட 20 அமைப்புகளின் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களின் நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்திடவும் திட்டமிட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க