`2 நாள்களில் இடைக்கால அறிக்கை' - மத்தியக்குழுவுக்கு ஆணையிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை! | madurai high court order to submit the Interim Report for gaja storm

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (28/11/2018)

கடைசி தொடர்பு:01:30 (28/11/2018)

`2 நாள்களில் இடைக்கால அறிக்கை' - மத்தியக்குழுவுக்கு ஆணையிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

கஜா புயல் பாதிப்புகுறித்து ஆய்வுசெய்த மத்தியக் குழு, 2 நாள்களில் இடைக்கால அறிக்கை தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கஜா

கஜா புயலால் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் புயலால் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 82,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் மரங்கள் சாய்ந்ததோடு, 735 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 1.17 லட்சம் வீடுகளும், 88,102 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாயமும் சேதமடைந்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் களத்தில் இறங்கிப் பணி செய்துவருகின்றனர். இந்நிலையில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி  வழக்கறிஞர் ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்ற மதுரைக்  கிளையில் மனு அளித்திருந்தனர். இந்த மனுமீது, இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், " பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுப்புகள் வழங்க வேண்டும். மண்ணெண்ணெய் உள்ளிட்டவை ரேஷன் கார்டு தார்களுக்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும். கொசுவலைகளை வழங்க வேண்டும். தென்னை மரங்கள் உள்ளிட்ட பயிர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஜா பாதிப்பு மாவட்ட மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, சுகாதாரம் மற்றும் கல்வித்துறை முதன்மைச் செயலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்குப் பிறப்பித்தனர். மேலும், ``மத்திய அரசின் நிபுணர் குழு ஆலோசித்து, தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும். கஜா புயல் பாதிப்புப் பகுதிகளை ஆய்வுசெய்த மத்திய ஆய்வுக்குழு, 2 நாள்களில் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் மத்திய அரசு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் டிசம்பர் 6ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.