வெளியிடப்பட்ட நேரம்: 23:50 (27/11/2018)

கடைசி தொடர்பு:07:13 (28/11/2018)

`மீண்டும் காவிரி யுத்தம்’ - கர்நாடகாவில் புதிய அணை, அரசியல் சட்டத்துக்கே வினை!

'காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தாகிவிட்டது... இனி தமிழகத்துக்குள் காவிரி கரைபுரண்டோடும்' என்று மாநிலத்தை ஆளும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசும் கலர் கலராக ரீல் சுற்றின. ஆனால், மழை புண்ணியத்தில் வந்துகொண்டிருக்கும் கொஞ்சநஞ்ச தண்ணீருக்கும் இப்போது வேட்டு வைக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறது கர்நாடக அரசு. இதற்கு, மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசும் வெண்சாமரம் வீச ஆரம்பித்திருப்பதுதான் கொடுமையோ கொடுமை!

கர்நாடகாவில் புதிய அணை

 

காவிரி ஆற்றின் குறுக்கே, ஒகேனக்கல் அருகே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதென்பது அந்த மாநில அரசின் நீண்டகாலத் திட்டம். ஆனால், ஆரம்பத்திலிருந்தே இதற்கு தமிழகத் தரப்பிலிருந்து எதிர்ப்புக் காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தது கர்நாடக அரசு. அங்கே அணைக் கட்டி, குடிநீர் பயன்பாட்டுக்கு தண்ணீரைச் சேமிப்பதோடு, 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இருப்பதாகவும் அந்தத் திட்ட அறிக்கையில் அது குறிப்பிட்டிருந்தது. இதற்கு அனுமதி தரக்கூடாது என்று தமிழகத் தரப்பிலிருந்து எதிர்ப்புக்காட்டப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம், இதற்கான முதல்கட்ட அனுமதியை வழங்கியிருக்கிறது. இந்த விஷயம் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ``ஏற்கெனவே காவிரி டெல்டா மாவட்டங்கள் கஜா புயல் சோகத்தில் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு இந்த அனுமதியைக் கொடுத்துள்ளது. காவிரி நதிநீரைப் பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம் மூலமாகத்தான் எதையும் செய்ய வேண்டும். ஆனால், அதை அறவே புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக மத்திய அரசு இப்படி முடிவெடுத்திருப்பது, அரசியல் சட்டத்துக்கே விரோதமானது'' என்று கடும் விமர்சன அம்புகள் பி.ஜே.பியை நோக்கிப் பாய ஆரம்பித்துள்ளன.


தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் பேசும்போது, ``மேகதாது அணையைக் கட்டுவது சட்டவிரோதமானது. கீழ்மடைக்குச் செல்லும் பாசனநீரைத் தடுக்கக்கூடாது என்பது உலக அளவிலான நீர்ப்பாசன சட்டத்தின் அடிநாதமாகும். அப்படியிருக்கும்போது, அங்கே அணைகட்ட கர்நாடகாவுக்கு சட்டப்படி உரிமை கிடையாது. 
தமிழகத்துக்குக் காவிரி நீரைத் தரக்கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. அதனால்தான், 'தமிழகம் சமதளப்பகுதியாக இருப்பதால், அங்கே அணைகள் கட்டமுடியாது. அதனால், மேகதாதுவில் அணைக் கட்டி தண்ணீரைத் தேக்கி தமிழகத்துக்கு நாங்கள் தரத் தயாராக  இருக்கிறோம்' என்று தவறான தகவலை மத்திய அரசிடம் தெரிவித்தார் கர்நாடக முதல்வர். அதை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். ஒகேனக்கலில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் ராசிமணல் என்கிற இடத்தில் அணை கட்டுவதற்கு காமராஜர் அடிக்கல் நாட்டியுள்ளார். அங்கே அணைகட்டுவதற்கு கர்நாடக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அறிக்கை கொடுத்தோம். ஆனால், 'நாம் அணை கட்டுவதற்கு கர்நாடகா அனுமதிக்காது' என்று சொல்லி தமிழக அரசே எங்களுக்குத் தடைபோட்டுவிட்டது. உண்மையில் காவிரியின் குறுக்கே தமிழகப் பகுதியில் தாராளமாக அணை கட்டலாம். சட்டப்படி அதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒத்துழைப்பு மட்டும்தான் கர்நாடக அரசு தரவேண்டும். முறைப்படியான அனுமதியை மத்திய அரசுதான் தர வேண்டும்' என்று வலியுறுத்தினோம். இதையெல்லாம் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், நயவஞ்சகமாகக் காய் நகர்த்தி, கர்நாடக அரசு தங்கள் பகுதியில் அணை கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. 

கர்நாடகா


தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. நடுவர் மன்ற தீர்ப்புக்கு முரணானது. ஆகவே, அந்த அனுமதியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இதைத் தமிழக அரசும் உரிய முறையில் மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும். கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கையைக் காவிரி ஆணையத்திடம்தான் மத்திய அரசு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அதை மத்திய அரசு மீறிவிட்டது. இது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கே எதிரானது” என்று கடுமையாகச் சாடினார்.
மேகதாது அணை குறித்து குமுறலுடன் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``இந்தத் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்திருப்பதன் மூலமாகத் தமிழகத்துக்கு மீண்டும் தொல்லையை ஆரம்பித்துள்ளது கர்நாடக அரசு. மேகதாதுவில் அணைக்கட்ட இருக்கும் இடத்தில் போராட்டம் நடத்த ஏற்கெனவே நாங்கள் முயன்றோம். ஆனால், தமிழக அதிகாரிகள் எங்களை எல்லை தாண்டவிடவில்லை.


அங்கே குடிநீருக்காக அணைக் கட்டுவதாக கர்நாடகா அரசு சொல்கிறது. இது சுத்தப்பொய். இதற்குச் செலவிடுவதைவிட, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு குறைவாகக் கர்நாடகத்திலேயே வேறோர் இடத்தில் அணைகட்ட நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. கர்நாடகா மாநிலத்தில் உருவாகி அதே மாநிலத்தில் போய் கடலில் கலக்கும் நீரின் அளவு 2,100 டி.எம்.சி. அதாவது, அந்த மாநிலத்தில் பரவிக்கிடக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பிரதேசத்தில் மழைக் காலங்களில் ஆண்டுதோறும் பெய்கிற மழைநீரில் 2,100 டி.எம்.சி மேற்கு நோக்கிப் பாயும் சுமார் ஒன்பது நதிகளின் வாயிலாக 135 கி.மீ. தூரம் பயணித்து கடலில் கலக்கிறது. இந்த விவரங்கள் அனைத்தும் கர்நாடக மாநில அரசு மற்றும் மத்திய அரசிடமும் இருக்கின்றன. இங்குள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அணைக் கட்டினால், குடிநீருக்காகத் தாராளமாக தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம். அந்த மாநில விவசாயத்துக்கும் பயன்படும். இதனால் காவிரியின் குறுக்கே அணைக்கட்டி தமிழகத்துக்குக் பாதிப்பு ஏற்படுத்தத் தேவையிருக்காது. 


இப்படியொரு மாற்றுத்திட்டம் இருப்பதைக் கர்நாடக மாநில ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரும் உலக வங்கி நியமித்திருந்த நீரியல் ஆலோசகருமான டாக்டர் பவானி சங்கர், அந்த அரசிடம் முன்வைத்தார். விரிவான ஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்தார். இதை நிறைவேற்றினால் கர்நாடக, தமிழக மாநிலங்களுக்கு இடையே எந்த மோதலும் வராது. உடனே நிறைவேற்றுங்கள் என்றும் கூறிவந்த பவானிசங்கர் சமீபத்தில்தான் இறந்துபோனார். கடைசிவரை கர்நாடகா அரசு கண்டுகொள்ளவே இல்லை. இப்படி கர்நாடகத்தின் தண்ணீர் தேவைக்கான வாய்ப்புகள் பல இருந்தும் அதையெல்லாம் விட்டுவிட்டு, தமிழக விவசாயத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே செயல்படுகிறது கர்நாடக அரசு. இதெல்லாம் தெரிந்திருந்தும் மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியமும் அனுமதி கொடுத்துள்ளது. இது தமிழக விவசாயிகளுக்குக் கர்நாடக அரசுடன் சேர்ந்துகொண்டு மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு செய்யும் மாபெரும் துரோகமே'' என்று கொந்தளித்தார். 'கடைமடை வரை தண்ணீர் வரவில்லை' என்று டெல்டா விவசாயிகள் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில், 'இனி முதல் மடைக்கும் தண்ணீர் இல்லை' என்று ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரிய அனுமதி. இதற்கு எதிராகத் தமிழக அரசு வீரியமாக சட்டப் போராட்டத்தில் இறங்க வேண்டும். தமிழக மக்களும் தங்களின் போர்க்குரலை ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க