வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (28/11/2018)

கடைசி தொடர்பு:07:16 (28/11/2018)

வறுமை காரணமாக அரசின் உதவியை நாடும் இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணியின் துணை கேப்டன்!

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் துணை கேப்டனாக பங்கேற்க உள்ளார் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சுகனேஷ்.  இவர் தன் வறுமையைப் போக்க அரசு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாற்றுத் திறனாளி கிரிக்கெட் துணை கேப்டன்

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுகனேஷ். இவரின் தந்தை மகேந்திரன், வாடகை ஆட்டோ ஓட்டிவருகிறார். மாற்றுத் திறனாளியான சுகனேஷ், குடும்ப வறுமை காரணமாக பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. பள்ளிப் படிப்பை தொடராமல் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு மண்டல மற்றும் தேசியளவில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். இவரின் திறமையின் காரணமாக இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுகனேஷ் காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்பயிற்சிக் கூடத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த வருமானம் போதாத நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தனக்கு நிரந்தரப் பணி கிடைக்கத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மும்பையில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிக்குச் செல்ல பணம் இல்லாத நிலையில், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துவிட்டு மனு கொடுத்துவிட்டு வெளியே நின்றிருந்தார். அப்போது அங்கிருந்த ‘அளவூர்’ நாகராஜன் என்ற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இவரின் நிலையைக் கண்டு உதவி செய்ய முன்வந்தார். நாளை மும்பை செல்ல இருக்கும் நிலையில் விமான டிக்கெட் மற்றும் அங்கே தங்குவதற்கு ஆகும் ஐயாயிரம் செலவையும்  ‘அளவூர்’ நாகராஜன் ஏற்றுக்கொண்டார். மாவட்ட நிர்வாகமும் இவருக்கு முன்வந்து உதவ வேண்டும் என அங்கிருந்தவர்கள் சுகனேஷுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க