வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:07:19 (28/11/2018)

கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட ரயிலில் புறப்பட்டார் முதல்வர்!

முதல்வர்

கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தென்னை மரங்கள், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது மட்டுமல்லாமல், பலரின் வீடுகளும் இடிந்துவிழுந்தன. இதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்கள் எதிர்ப்பைக் காட்டினர் பொதுமக்கள். கடந்த 20-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஹெலிகாப்டர் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்றனர். மோசமான வானிலை காரணமாக, சில பகுதிகளை மட்டுமே பார்வையிட்டுத் திரும்பினர். இது எதிர்க்கட்சிகள் மற்றும் இயக்கங்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. 

கஜா பாதித்த பகுதிகளை பார்வையிட புறப்பட்ட முதல்வர்

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புயலில் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பார்வையிட, 28-ம் தேதி (புதன் கிழமை) செல்லவிருப்பதாகச் செய்திகள் வந்தன. அதன்படி, நேற்று இரவு, எழும்பூர் ரயில் நிலையத்தில் காரைக்கால் விரைவு ரயில் மூலமாக, நாகப்பட்டினம் புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நாளை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவிருக்கிறார்.