``மேகதாது அணைக்கு அனுமதி வழங்கியது கண்டனத்துக்குரியது” - முத்தரசன் கருத்து | Chidambaram CPI State Secretary Mutharasan speach

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:07:27 (28/11/2018)

``மேகதாது அணைக்கு அனுமதி வழங்கியது கண்டனத்துக்குரியது” - முத்தரசன் கருத்து

காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதுபோன்ற காலங்களில் நிர்வாகத்தை முடிக்கிவிட்டு சரியான நடவடிக்கை எடுத்தார்கள். தற்போது அப்படி இல்லை. இது கவலை அளிக்கிறது. கண்டனத்துக்குரியது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும், டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நிர்வாகக்குழு சேகர் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்துப் பேசினார்கள்.

முத்தரசன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் கூறியதாவது. ``கஜா புயல் டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அரசு புயல் முன்னெச்சரிக்கையில் செயல்பட்டதுபோல் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தாமதமாக உள்ளது. மின் இணைப்புகளைச் சரி செய்ய இன்னும் பல மாதங்கள் ஆகும். மத்தியக்குழு வருகை என்பது கண் துடைப்பு.

மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்கும் ரூபாய் 15,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இது போன்ற காலங்களில் நிர்வாகத்தை முடுக்கிவிட்டு சரியான நடவடிக்கை எடுத்தார்கள். தற்போது அப்படி இல்லை. இது கவலை அளிக்கிறது. கண்டனத்துக்குரியது. விவசாயிகளுக்குப் பயிர் காப்பீட்டுத் தொகை இன்னும் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்கச் செய்து இந்த ஆண்டுக்கான காப்பீட்டு தொகையை அரசே கட்ட வேண்டும்.

காவிரி ஆற்றில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. இதற்குத் தமிழக அரசு போர்க் குரல்  எழுப்ப வேண்டும். ராஜீவ் கொலைக் கைதிகளை இதுவரை விடுதலை செய்யவில்லை. அ.தி.மு.க-வினர் மாணவிகளை எரித்த வழக்கில் கைதிகளை விடுதலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து வரும் 3-ம் தேதி ம.தி.மு.க ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்துக்கு  அழைப்பு விடுத்துள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கும். இதேபோல் மாவட்டத்தில் பத்து இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. பட்டேல் சிலைக்கு ரூ 3,600 கோடி செலவு செய்த மோடி நாடு முழுவதும் விவசாயிகள் கடனில் சிக்கி தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களின் வாழ்வை காக்க விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறார். விவசாயிகளின் நண்பன் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மோடி விவசாயக் கடன்களை ரத்துசெய்ய வேண்டும். கஜா புயலில் சேதம் அடைந்த பகுதிகளை பிரதமர் பார்வையிட்டு அரசு கேக்கும் நிதியை  உடனே வழங்க வேண்டும்” என்றார்.