வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (28/11/2018)

கடைசி தொடர்பு:07:37 (28/11/2018)

கஜா புயல்: நிவாரணப் பணிகளுக்கு ரூ.6 கோடியே 79 லட்சம் நிதி வழங்கிய என்.எல்.சி இந்தியா நிறுவனம்

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதன்மூலம் ரூ. 3 கோடியே 79 லட்சம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. என்எல்சி இந்தியா நிறுவனம், தனது பங்காக கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு ஏற்கனவே ரூ.3 கோடி அறிவித்திருந்த நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் மொத்தம் ரூ. 6 கோடியே 79 லட்சம் திரட்டப்பட்டது.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக என்.எல்.சி இந்தியா நிறுவனம் மற்றும்  அந்நிறுவன ஊழியர்கள் வழங்கிய ரூ. 6 கோடியே 79 லட்சத்துக்கான காசோலையை சென்னையில் அந்நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராக்கேஷ் குமார் தமிழக முதல்வரிடம் வழங்கினார்.

என்எல்சி

இம்மாதம் 16-ம் தேதி அதிகாலை வீசிய கஜா புயலானது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் துயர்துடைப்புப் பணிகளுக்கு நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதன்மூலம் ரூ.3 கோடியே 79 லட்சம் பெறப்பட்டது.

என்.எல்.சி இந்தியா நிறுவனம், தனது பங்காக கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு ஏற்கெனவே ரூ.3 கோடி அறிவித்திருந்த நிலையில், என்.எல்.சி இந்தியா நிறுவனம் சார்பில் மொத்தம் ரூ. 6 கோடியே 79 லட்சம் திரட்டப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் என்.எல்.சி இந்தியா நிறுவன இயக்குநர்கள்  தங்கபாண்டியன், விக்ரமன், என்.என்.எம். ராவ் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி இந்தியா நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராக்கேஷ்குமார்  ரூ.6 கோடியே 79 லட்சத்துக்கான காசோலையை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

என்.எல்.சி இந்தியா நிறுவனமும் அதன் பணியாளர்களும் தாரளமனதுடன் வழங்கிய நிதி உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர், புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனம் உடனடியாக சுமார் 500 பணியாளர்களுடன் தேவையான இயந்திரங்களை அனுப்பியதையும், ஏராளமான நிவாரணப் பொருள்கள் அனுப்பியதையும் நினைவுகூர்ந்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.