``பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றதைச் செய் என்றார் விஜயகாந்த்” - புதுக்கோட்டையில் பிரேமலதா | Vijayakanth asked me to help the cyclone affected people -Premalatha

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:07:45 (28/11/2018)

``பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றதைச் செய் என்றார் விஜயகாந்த்” - புதுக்கோட்டையில் பிரேமலதா

அரசியல்  கூட்டணி நிலைப்பாடு குறித்தெல்லாம், தற்போது ஏதும் முடிவெடுக்க வேண்டாம். தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உன்னால் இயன்றதைச் செய் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியதாக பிரேமலதா கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த்


தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருள்கள் வழங்கினார். பின்னர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம், ``கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். மத்தியக் குழு ஆய்வில், புயலால் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். முதல்வர் அமைச்சர்கள்தான் மக்களைப் பார்க்கவில்லை. எதிர்கட்சித்தலைவரும்  மக்களைச் சந்திக்காமல் ஒரு சில பகுதிகளை மட்டும் பார்த்து விட்டுச் சென்றுவிட்டார்.

முன்பு, மழையைப் பயன்படுத்தி இடைத்தேர்தலை ரத்து செய்தனர். தற்போது புயலை காரணம் காட்டி இடைத்தேர்தலை நடத்த விடமாட்டார்கள். அ.தி.மு.க-வும், தி.மு.க-வும்  இடைத்தேர்தலைக் கண்டு அஞ்சுகிறது. திருவாரூரில் தி.மு.க ஜெயிப்பதே கடினமாகத்தான் இருக்கும். ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் இடைத்தேர்தல் வரலாம். ஆனால் அ.தி.மு.க, தி.மு.க இடைத்தேர்தல் நடத்த விடமாட்டார்கள். கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில்தான் தே.மு.தி.க முடிவு செய்யும். தற்போது கூட்டணி குறித்தெல்லாம் எந்த ஆலோசனையும் நடத்த வேண்டாம், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன் நிவாரணங்களை வழங்கு என்று விஜயகாந்த் என்னிடம் கூறினார்” என்றார்.