``கஜா புயல் நிவாரணப் பொருள்களை இலவசமாக எடுத்துச்செல்லலாம்” - இந்திய ரயில்வே அறிவிப்பு | Railway offers free transport of cyclone relief to TN

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:07:48 (28/11/2018)

``கஜா புயல் நிவாரணப் பொருள்களை இலவசமாக எடுத்துச்செல்லலாம்” - இந்திய ரயில்வே அறிவிப்பு

கஜா புயலால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தமிழக அரசு கஜா புயல் பாதிப்புகளைச் சரிசெய்ய நிவாரணத் தொகையாக சுமார் 15,000 கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. மத்திய அரசு சார்பாக புயல் பாதிப்பைக் கணக்கெடுக்க நியமிக்கப்பட்ட குழு புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தது. சேதங்கள் மிகத் தீவிரமாக இருப்பதால் மத்திய அரசு அமைத்த குழுவினால் புயல் பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகப் பார்வையிட முடியவில்லை. 

இந்திய ரயில்வே - கஜா புயல்


புயல் பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து அரசும் அரசுசாரா தன்னார்வலர்களும் டெல்டா பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளுக்கான நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே இலவசமாக நிவாரணப் பொருள்களை எடுத்துச்செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதமும் எழுதி இருந்தார். 

இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை  டிசம்பர் 10 வரை ரயில்களில் இலவசமாக எடுத்துச்செல்லலாம் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அரசு நிறுவனங்களும் டிவிஷனல் மேனேஜர்களால் அனுமதிக்கப்பட்டவர்களும் நிவாரணப் பொருள்களை இலவசமாக அனுப்புவதற்குப் பதிவு செய்யலாம். 

இந்த அறிவிப்பில் பயணிகள் அல்லது சரக்கு வண்டிகள் ஆகிய இரண்டுவகை ரயில்களையும் நிவாரணப் பொருள்களை அனுப்புவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், சரக்கு பெறுநர் மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டாகவோ துணை ஆணையராகவோ இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.