`ராகுல் அலை வீசுகிறது; 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி!’- திருநாவுக்கரசர் ஆரூடம் | The Congress is sure to win in 5 state elections - Thirunavukkarar

வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (28/11/2018)

கடைசி தொடர்பு:08:46 (28/11/2018)

`ராகுல் அலை வீசுகிறது; 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி!’- திருநாவுக்கரசர் ஆரூடம்

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர்,  மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் பலமாக உள்ளதால், வெற்றி பெறுவது உறுதி எனத் திருநாவுக்கரசர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.


தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘கஜா புயலின் தாக்கத்தால்  புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வரலாற்றில் இல்லாத அளவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை, மா, தேக்கு போன்ற மரங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளது. தென்னையை மட்டுமே நம்பியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த ஒரு தென்னை மரத்துக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல இடங்களில் குடிநீர் உணவு சரியாக போய்ச் சேரவில்லை. சேதமடைந்த படகுகளுக்கான கடன் தொகையை முழுமையாக அரசு ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு தேசிய பேரிடர் நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ.5,000 கோடி ஒதுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் மந்தமாக உள்ளது. புயல் பாதித்த பகுதிகளைப் பிரதமரோ அல்லது மத்திய அமைச்சரோ பார்வையிட வராதது வருத்தமளிக்கிறது. முதல்வர், துணை முதல்வர் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்போல் ஒரே ஹெலிக்காப்டரில் பயணம் செய்கின்றனர். புயல் பாதிப்படைந்த பகுதிகளை முறையாகப் பார்வையிட்டால்தான் பாதிப்பின் உக்கிரம் தெரியும். மத்தியக் குழு நேரடியாகப் பார்த்ததால் பாதிப்பின் வீரியம் குறித்து தெரிவித்துள்ளனர் 

புயல் பாதிப்பு பகுதிகளில் நடந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தரப்பில் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ராகுல் அலை வீசுகிறது. அதேநேரத்தில் மோடியின் மீது எதிர்ப்பு அலை வீசுகிறது. வர இருக்கும் 5 மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி’ என்றார்.