இன்ப அதிர்ச்சியளித்த போலீஸார்! - ஆனந்தக் கண்ணீர் வடித்த துப்புரவுப் பணியாளர் | police men celebrate scavenger's birthday

வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (28/11/2018)

கடைசி தொடர்பு:11:16 (28/11/2018)

இன்ப அதிர்ச்சியளித்த போலீஸார்! - ஆனந்தக் கண்ணீர் வடித்த துப்புரவுப் பணியாளர்

பொதுவாகவே போலீஸ் என்றால் மக்கள் தெரித்து ஓடுவார்கள். போலீஸாரிடம் உள்ள மன உளைச்சல் காரணமாகப் பொதுமக்களிடம் அன்பாகப் பேசவோ, குறைகளையோ காது கொடுத்துக் கேட்கும் அளவுக்கு அவர்களிடத்தில் பொறுமை இருப்பதில்லை. இவ்வளவு ஏன், குடும்பத்தினரிடம் கூட மனம்விட்டு பேச முடியாத நிலைதான் போலீஸாரிடத்தில் காணப்படுகிறது. சமீபகாலமாக போலீஸாரின் நடவடிக்கை பொதுமக்களைக் காயப்படுத்தும் விதமாக இருந்தாலும் அவ்வப்போது போலீஸாரைப் பற்றி நல்ல செய்தியும் வெளியாகாமல் இல்லை. இந்தச் செய்தியும் போலீஸாரைப் பற்றிய பாசிடிவான ரகம்தான்.

துப்புரவு பணியாளர் பிறந்த நாள் கொண்டாடிய போலீசார்

சென்னை பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாகத் துப்புரவுப் பணியாளராக அனுஷ்யா என்பவர் பணியாற்றி வருகிறார். பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் வந்து போவார்கள். ஆனால், அனுஷ்யா மட்டும் அங்கே தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். நீண்ட காலமாக அங்கே பணிபுரிவதால் போலீஸாரும் அனுஷ்யாவிடம் கரிசனையுடன் நடந்துகொள்வார்கள். அனுஷ்யாவுக்கு நேற்று பிறந்தநாள். அதை போலீஸாரிடம் விளையாட்டாக அனுஷ்யா கூறி விட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றுள்ளார். துப்புரவுப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல புறப்பட்டபோது பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் அவரை அழைத்துள்ளார். உள்ளே சென்றால் மேஜையில் பெரிய கேக் ஒன்று தயாராக இருந்தது. 

அனுஷ்யாவைப் பார்த்த இன்ஸ்பெக்டர், `உங்கள் பிறந்தநாளுக்குத்தான் கேக் வெட்டுங்கள்' என்று அன்புடன் கூறியுள்ளார். போலீஸார் காட்டிய அன்பால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அனுஷ்யா, தன் வாழ்க்கையில் முதன்முறையாக கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார். காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்துக் காவலர்களும் அனுஷ்யாவுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். அனுஷ்யாவுக்கு பிறந்த நாள் பரிசும் போலீஸார் வழங்கினர். 

கல்லுக்குள் ஈரம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க