வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (28/11/2018)

கடைசி தொடர்பு:12:25 (28/11/2018)

`வீழ்ந்த மரங்களை இலவசமாக எடுத்துச்செல்லுங்கள்!' - கண்கலங்க வைக்கும் விவசாயிகளின் அறிவிப்பு

கஜா புயலால் தென்னை மரங்கள் சாய்ந்த சோகத்தைப் போலவே, சாய்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்துவது தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை அப்புறப்படுத்துவது பெரிய செலவு பிடித்த, கடும் உழைப்பு சார்ந்த வேலையாக இருக்கிறது. ஒன்றிரண்டு மரங்கள் விழுந்துகிடந்தால் தோப்புக்காரரே அப்புறப்படுத்திவிடலாம். ஆனால், ஒரே வயலில் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்துகிடந்தால் எப்படி தனியாளாக அப்புறப்படுத்துவது. ஆனால், அனைத்தையும் சரிசெய்த பின்புதான் மறுபடியும் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியும்.

தென்னை

புயலால் வீட்டையும் தென்னந்தோப்பையும் இழந்து, அன்றாடச்சாப்பாட்டுக்கே திண்டாடும் சூழலில் திடீரென தென்னை மரங்களை அப்புறப்படுத்த எங்கே செல்வார்கள். எனவே, விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்த அரசின் உதவியை எதிர்பார்த்தார்கள். வெட்டுக்கூலிக்குகூட வழியில்லாதவர்களால் வேறு யாரை எதிர்பார்க்க முடியும். ஆனால், அரசின் பார்வை கிராமங்களை நோக்கி வரவேயில்லை என்பதால் மனதளவில் கைவிடப்பட்ட, கையறு நிலையில் பொதுமக்களையும், தன்னார்வலர்களையும் நோக்கி கோரிக்கை வைக்கத் தொடங்கிவிட்டார்கள். ``ஓட்டு வீடு, கூரை வீடு, செங்கற்சூளை என தென்னை மரத்தின் பயன்பாடு தேவைப்படும். எவர் வேண்டுமானாலும் இங்கே வீழ்ந்துகிடக்கும் தென்னை மரங்களை இலவசமாக எடுத்துச் செல்லுங்கள்" என்று நண்பர்கள் மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் அறிவிப்பு கொடுக்கிறார்கள்.

ஏன் இந்தமாதிரியான அறிவிப்புகள் என்று புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலரிடம் விசாரித்தபோது, எங்களுக்கு எங்கள் நிலமாவது தற்போது கிடைத்தாக வேண்டும். மீண்டும் விவசாயத்தைத் தொடங்கியாக வேண்டும். அதற்கு இவற்றையெல்லாம் அப்புறப்படுத்தியாகணும். நாங்கள் வளர்த்த மரங்கள், இப்போதுவரை எங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த, குடும்பத்தில் ஒன்றான இந்த தென்னை மரங்கள் வீழ்ந்துகிடப்பதைப் பார்த்தாலே மனதளவில் நொறுங்கிப் போகிறோம். எனவே உடனே அப்புறப்படுத்தினால்தான் மனதும், அடுத்தகட்டமாக என்ன செய்வதென யோசிக்கும்" என்கிறார்கள் சோகத்துடன்.