`2016-ல் கேள்வி; 2018-ல் பதில்!'- 7 பேர் விடுதலையில் மத்திய அரசின் சதியை அம்பலப்படுத்தும் ராமதாஸ் | Ramadoss slams central government

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (28/11/2018)

கடைசி தொடர்பு:12:35 (28/11/2018)

`2016-ல் கேள்வி; 2018-ல் பதில்!'- 7 பேர் விடுதலையில் மத்திய அரசின் சதியை அம்பலப்படுத்தும் ராமதாஸ்

7 தமிழர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு நடத்திய மோசடியான நாடகங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன என்று தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், 81 நாள்கள் ஆகும் நிலையில் அதன் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது மனித உரிமை மீறலாகும் என்று கூறியுள்ளார்.

பேரறிவாளன்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்த விவகாரத்தில், உரிய விதிகள் வகுக்கப்படாத நிலையில், இல்லாத விதிகளைக் காரணம் காட்டி அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வந்தது அம்பலமாகியிருக்கிறது. எந்த அடிப்படையுமே இல்லாமல் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எழுவர் விடுதலையை மத்திய அரசு தாமதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

ராஜீவ் கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், குற்றவழக்குகளில் தண்டனைக் குறைப்பு செய்யும் அதிகாரம் எந்த அரசுக்கு உள்ளது என்பது குறித்து 7 வினாக்களை எழுப்பி அதுபற்றி முடிவெடுக்கும்படி அரசியல் சாசன அமர்வைக் கேட்டுக்கொண்டார். அவரது ஓய்வுக்குப் பிறகு 7 பேர் விடுதலை குறித்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், யாருக்கு அதிகாரம் என்பது குறித்த வழக்கைத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளின்படி தண்டனைக் குறைப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்று அரசியல் சாசன அமர்வு 02.12.2015 அன்று தீர்ப்பளித்தது.

ராமதாஸ்அதைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளின்படியும், அரசியலமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 73 ஆவது பிரிவின்படியும் தண்டனைக் குறைப்பு செய்வதற்காக மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின் நகல்களை வழங்கக்கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் பேரறிவாளன் விண்ணப்பித்து இருந்தார். அந்த விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில்தான் 7 பேர் விடுதலை பற்றி முடிவெடுக்கும்படி நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 23.01.2018 அன்று மத்திய அரசுக்கு ஆணையிட்டிருந்தது.

ஆனால், 7 தமிழர்களை விடுதலை செய்ய அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறிவிட்டது. அதுமட்டுமன்றி, 7 தமிழர் விடுதலைக்கு குடியரசுத் தலைவர் அனுமதி மறுத்து விட்டதாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. அதன்தொடர்ச்சியாகத்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் 7 தமிழர்களை மாநில அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி 7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக ஆளுநருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அமைச்சரவையின் பரிந்துரை கடந்த 81 நாள்களாக ஆளுநர் புரோகித்தின் பரிசீலனையில் உள்ளது.

இத்தகைய சூழலில்தான் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு நடத்திய மோசடியான நாடகங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. 08.01.2016 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பேரறிவாளன் வினவிய வினாக்களுக்கு மத்திய உள்துறை இப்போது அளித்துள்ள பதில்கள்தான் நாடகங்களை அம்பலப்படுத்தியுள்ளன. மத்திய உள்துறை அளித்துள்ள பதிலில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-435 பிரிவுகளின் கீழ் தண்டனைக் குறைப்பு செய்வது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த விதிகளையும் வகுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 7 தமிழர்களின் தண்டனைக் குறைப்பு  குறித்த பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றால், அதை சில சட்டங்கள் அல்லது விதிகளின்படிதான் செய்ய முடியும். ஆனால், தண்டனைக் குறைப்பு குறித்த விதிகள் வகுக்கப்படாத நிலையில், மத்திய அரசு எவ்வாறு தண்டனைக் குறைப்பு குறித்த பரிந்துரையை நிராகரிக்க முடியும்.

விடுதலைக்காக காத்திருக்கும் 7 பேர்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில்தான், விதிகளே இல்லாத சூழலில் தங்கள் விருப்பப்படி அது குறித்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதன் மூலம் 7 தமிழர்கள் விடுதலையை மத்திய அரசு இரு ஆண்டுகள் தாமதப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமன்றி, இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலும் ஆகும். 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்ய அற்புதமான வாய்ப்பு கிடைத்த நிலையில், மத்திய அரசு சொந்த வெறுப்பு காரணமாக அவர்களின் விடுதலைக்கு எதிராக முடிவெடுத்து சதி செய்திருக்கிறது. இதனால் 7 தமிழர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்புகளை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும்.

இது ஒருபுறமிருக்க 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து  இன்றுடன் 81 நாள்கள் ஆகும் நிலையில் அதன் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்வதும் மனித உரிமை மீறலாகும். 7 தமிழர்கள் விடுதலையைத் தாமதம் செய்ய எந்த நியாயமான காரணங்களும் இல்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் 7 தமிழரையும் விடுவித்து ஆளுநர் ஆணையிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.