குளறுபடி இருக்காது; இனி மாணவர்கள் முன்னிலையில் மறுமதிப்பீடு! - அண்ணா பல்கலைக்கழகம் | Anna University introduced new revelation method presence of students

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (28/11/2018)

கடைசி தொடர்பு:12:50 (28/11/2018)

குளறுபடி இருக்காது; இனி மாணவர்கள் முன்னிலையில் மறுமதிப்பீடு! - அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழத்தில் தேர்வுத்தாள் மறு மதிப்பீடு செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகளும், பணபரிமாற்றங்களும் நடப்பதாகவும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கண்காணிப்பாளர் உட்பட நான்கு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மறுமதிப்பீட்டு முறையில் மாற்றம் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது உயர்கல்வித்துறை. இதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் முன்னிலையிலேயே மறுமதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

அண்ணா பல்கலைக்கழகம்

புதிய மறுமதிப்பீட்டு முறையை முதல்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை உறுப்புக்கல்லூரிகளாக உள்ள  கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் அண்ட் பிளானிங், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதிய மறுமதிப்பீடு முறையில், மறுமதிப்பீடு கோரும் மாணவர்கள் முன்னிலையில், அந்தப் பாடத்தை நடத்திய ஆசிரியர், அந்தப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர் ஒருவர் மற்றும் துறைத்தலைவர் அல்லது மறுமதிப்பீட்டைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்படும் ஆசிரியர் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்யப்படும். மாணவருக்கு மறுமதிப்பீட்டில் எழும் சந்தேகத்தை ஆசிரியர்கள் குழு பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் மாணவரின் மதிப்பெண் அவரது விடைத்தாளின் பின்பக்கத்தில் எழுதி ஆசிரியர் குழுவில் உள்ள அனைவரும் கையெழுத்திட வேண்டும். மறுமதிப்பீட்டில் பதினைந்து மதிப்பெண்ணுக்குக் கூடுதலாக பெற்றிருந்தால் இந்தக் குழு அதற்கான விளக்கத்தையும் வழங்க வேண்டும். இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது வளாக தேர்வுக்கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம்.