வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (28/11/2018)

கடைசி தொடர்பு:12:28 (28/11/2018)

`அன்று குற்றவாளி... இன்று நல்லவன்' - பிரபல நடிகரின் ரசிகருக்கு நேர்ந்த கொடூரம் 

பிரபல நடிகரின் ரசிகர் பாலாஜி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாலாஜி, திருந்தி வாழ்ந்த சமயத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பிரபல நடிகரின் தீவிர ரசிகர். 

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே வாலிபர் ஒருவரை பைக்கில் வந்த இரண்டு பேர் அரிவாளால் வெட்டினர். இந்தச் சம்பவத்தைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓட்டம்பிடித்தனர். வெட்டுப்பட்ட நபர், ஓட்டம் பிடித்தார். இருப்பினும் அவரை விடாமல் துரத்தி ஓடஓட வெட்டிச் சாய்த்துவிட்டு பைக்கில் வந்தவர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, உயிருக்குப் போராடிய அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலை சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் இறந்தவரின் பெயர் பாலாஜி. கொட்டிவாக்கம் காலனி பகுதியைச் சேர்ந்தவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இந்தக் கொலை குறித்து விசாரணை நடத்த இணை கமிஷனர் மகேஸ்வரி சம்பவ இடத்துக்குச் சென்றார். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சில முக்கிய தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன. அதன்அடிப்படையில் ஐவின் (26),  பசூல்(30), ராஜா (26), கார்த்திக் (33), சஞ்சய் (22) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.

யார் இந்த பாலாஜி?

பாலாஜிக்கு திருமணமாகி நதியா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர் மீதும் சில வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்டீபன்ராஜ் என்பவரின் வீட்டில் 500 சவரன் நகைகள் கொள்ளைப் போனதாக நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மூன்று பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது 500 சவரன் நகைகளைத் திருடவில்லை, நாங்கள் திருடியது 40 சவரன்தான் என்று கொள்ளையர்கள் தெரிவித்தனர். இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்டீபன்ராஜ் வீட்டில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, அவரின் வீட்டிலிருந்து கைத்துப்பாக்கி, சைனைடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ஸ்டீபன்ராஜ், அந்த வீட்டின் காவலாளி, டிரைவர் பாலாஜி (தற்போது கொலை செய்யப்பட்டவர்) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். சிறைக்குச் சென்றுவிட்டு வெளியில் வந்த பாலாஜி, திருந்தி வாழ்ந்துவந்தார். இவர், பிரபல நடிகர் ஒருவரின் தீவிர ரசிகர். அந்த நடிகர் பாலாஜியின் தோள்மீது கையை போட்டுள்ள புகைப்படத்தைதான் செல்போனில் பாலாஜி வைத்திருந்தார். குற்றச் செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்த பாலாஜி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரித்தபோது முக்கிய தகவல் கிடைத்தது. 

போலீஸார் கூறுகையில், ``பாலாஜியின் நண்பர் பசூல். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். பசூலுக்கும் சென்னையின் உள்ள பிரபலமான ஸ்டோர்ஸ் ஒன்றின் உறவினர் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்கள் இருவரும் பழகியபிறகு பசூலின் வாழ்க்கை ஸ்டைலே மாறியது. அந்தப் பெண், பசூலுக்காக அதிகளவில் பணத்தைச் செலவழித்துள்ளார். இதனால் பாலாஜிக்கும் பசூலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் உள்ளது. இதுவும் பாலாஜி கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்" என்றனர்.

 பசூல், ஐவின் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தபோது இன்னொரு தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். திருந்தி வாழ்ந்த பாலாஜி, எங்களைக் குறித்த தகவல்களைக் கூறிவந்தார். அவர் போலீஸ் இன்பார்மராக செயல்படுவதாக எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதனால்தான் பாலாஜியை கொலை செய்தோம் என்று வாக்குமூலமாக கொடுத்துள்ளனர். பாலாஜி வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடும் தகவல் கிடைத்ததும் அவரின் உறவினர்கள் உடனடியாக அங்கு வந்தனர். ரத்தவெள்ளத்தில் இருந்த பாலாஜியை மீட்டு ஷேர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தக் கொலை சம்பவம் டாஸ்மாக் கடை முன் நடந்தபோது அங்கு மதுகுடித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிய காட்சியும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.