``ஒரு வேளையாவது நல்ல உணவு அளிக்க ஆசை'' - மின் ஊழியர்களை நெகிழ வைத்த மக்கள் | villagers provide biriyani to electricity board workers

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (28/11/2018)

கடைசி தொடர்பு:13:10 (28/11/2018)

``ஒரு வேளையாவது நல்ல உணவு அளிக்க ஆசை'' - மின் ஊழியர்களை நெகிழ வைத்த மக்கள்

மிழகத்தில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வர நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்கள் போராடி வருகின்றன. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றைச் சரி செய்து மீண்டும் நடும் பணியில் மின்வாரிய ஊழியர்கள்  ஈடுபட்டுள்ளனர். கிடைத்த உணவை உண்டு, மின்கம்பத்திலேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு தங்கள் பணியை மின் ஊழியர்கள் தொடர்கின்றனர்.

பிரியாணி விருந்து சாப்பிடும் மின்வாரிய ஊழியர்கள்

புயல் பாதித்த பகுதிகளில் பல வெளி மாவட்டங்களில் இருந்தும் மின் ஊழியர்கள் வந்து பணி புரிந்து வருகின்றனர். சேலம் மாவட்டத்திலிருந்து 40 மின்வாரிய ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் தங்கியுள்ளனர். அங்குள்ள மண்டபத்தில்தான் 40 பேரும் தங்கியிருந்து,  புயல் பாதித்த பகுதியில் சிறு சிறு குழுக்களாகச் சென்று மின்கம்பங்களைச் சரி செய்கின்றனர். ஆங்காங்கே கிடைத்ததை வாங்கிச் சாப்பிட்டு கொண்டு மின்னல் வேகத்தில் மின் இணைப்புகள் கொடுத்து வருகின்றனர். நேற்று இரவு பணியை முடித்து விட்டு வழக்கம்போல் தங்கியிருந்த மண்டபத்துக்கு மின் ஊழியர்கள் வந்தனர். மண்டபத்தின் முகப்பில் முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்த மக்கள் நின்று அவர்களை வரவேற்றனர். 

பின்னர், `ஐயா... எங்களுக்காக உங்கள் குடும்பத்தினரை விட்டு வந்து அரை குறை வயிற்றுடன் வேலை பார்க்கிறீர்கள். உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால், உங்களுக்கு ஒரு வேளையாவது நல்ல உணவு அளிக்க வேண்டுமென்பது எங்கள் விருப்பம். உங்களுக்காகப் பிரியாணி தயாரித்து வைத்துள்ளோம். சாப்பிட வாருங்கள்' என்று அழைத்துள்ளனர். மின்வாரிய ஊழியர்கள் நெகிழ்ந்துபோனார்கள். திருமண மண்டபத்தில் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மின்வாரிய பணியாளர் ஒருவர் கூறுகையில், "சேலத்தில் இருந்து இரண்டு பிரிவுகளாக பிரித்து அன்னவாசல் பகுதியில் 40 பேர் மின் இணைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபடுகிறோம். இளைஞர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். ஊர் மக்கள் கூடி எங்களுக்கு பிரியாணி அளித்துள்ளனர். மேலும், உற்சாகத்தையும் பணி செய்ய உத்வேகத்தையும் எங்களுக்கு இந்த சம்பவம் அளித்துள்ளது' என்றனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கு பேனர் வைத்து மக்கள் பாராட்டு
 

மின்வாரிய ஊழியர்களுக்கு பேனர் வைத்து மக்கள் பாராட்டு

அறந்தாங்கி அருகே கும்பூர் ஊராட்சியில் மின்வாரிய பணியாளர்களின் பணியினை பாராட்டி பேனர் வைத்துள்ளனர். அதில், கஜா புயலின் கோர தாண்டவத்தில் குரும்பூர் ஊராட்சியில் சிதலமடைந்த அனைத்து  மின் கம்பங்களையும் சரி செய்து மின்சாரம் வழங்கிய சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் குரும்பூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் கோடான கோடி நன்றி என பிளக்ஸ் பேனர் வைத்து தங்களது நன்றி உணர்வை வெளிப்படுத்தி உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க