தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தமிழக காதல் ஜோடி! - ஆந்திராவில் சடலங்கள் மீட்பு | Tamilnadu lovers dead body found in Andhra Pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (28/11/2018)

கடைசி தொடர்பு:13:48 (28/11/2018)

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தமிழக காதல் ஜோடி! - ஆந்திராவில் சடலங்கள் மீட்பு

தமிழகத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி, ஆந்திராவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மோனிஷா

ஆந்திர மாநிலம், குப்பம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று காலை இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவர் ரயில் மோதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவலறிந்த குப்பம் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களைப் பார்வையிட்டனர். தண்டவாளப் பகுதியில் இறந்தவர்களின் உடைமைகள் கிடந்தன. போலீஸார் அவற்றைக் கண்டெடுத்து சோதனை செய்தனர். இறந்தவர்கள், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை எட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஹேமந்த்குமார் (22) மற்றும் மோனிஷா (19) என்பது தெரியவந்தது. 

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடி

மோனிஷா, வேலூர் மாவட்டம் ஆற்காடு விளாப்பாக்கத்தில் உள்ள மஹாலஷ்மி மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மோனிஷாவும், ஹேமந்த்குமாரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சமீபத்தில் மோனிஷாவின் வீட்டுக்குத் தெரிந்துள்ளது. காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஹேமந்த்குமாரும், மோனிஷாவும் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் சடலங்கள் வீசப்பட்டனவா என்பது குறித்து குப்பம் ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.