வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (28/11/2018)

கடைசி தொடர்பு:15:30 (28/11/2018)

காடுவெட்டி குருவின் மனைவி பங்கேற்கவில்லை! எளிமையாக நடந்தது மகளின் திருமணம்

காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிக்கை குருவின் மூன்றாவது தங்கை மகன் மனோஜை இன்று எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான்கு மாத சிகிச்சைக்குப் பிறகு, கடந்த மே மாதம் காடுவெட்டி குரு காலமானார். இதையடுத்து, அவரின் குடும்பத்தில் தொடர் சர்ச்சைகள் ஏற்படத் தொடங்கின. `சொத்துக்காக என் பிள்ளைகளை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். அவர்களோடு என்னைச் சேர்த்து வையுங்கள்’ என்று குருவின் மனைவி லதா எழுதிய கடிதம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து குருவின் மகன் கனலரசன் தன் தாயை அவர்களின் உறவினர்களிடமிருந்து மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டார். இன்னும் குரு குடும்பத்தாருக்கும் அவரின் உறவினர்களுக்குமிடையே தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது.

இந்த நிலையில், இன்று காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிக்கைக்கும் குருவின் மூன்றாவது தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜுக்கும் எளிய முறையில் திருமணம் நடந்தது. மனோஜ், குருவின் தங்கை மகன் என்பதால் விருதாம்பிகையும் மனோஜும் சிறு வயதிலிருந்து காதலித்து வந்துள்ளனர். தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது மனோஜை கூடவே வைத்திருந்துள்ளார் குரு. தற்போது குருவின் குடும்பத்தில் நடந்துவரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இன்று விருதாம்பிகை-மனோஜ் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. கோயிலில் மிகவும் எளிமையான முறையில் இருவருக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றது. இதில் மனோஜின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். 

காடுவெட்டி குருவின் மனைவியை பா.ம.க-வில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவரால் சென்னையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இன்று நடந்த தன் மகளின் திருமணத்தில் லதா கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.