போலீஸ் ஏட்டுவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி? - கோயம்பேடு ஜெயந்தியின் வாக்குமூலம்  | Jayanthi shares about her friendship with police officer

வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (28/11/2018)

கடைசி தொடர்பு:16:05 (28/11/2018)

போலீஸ் ஏட்டுவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி? - கோயம்பேடு ஜெயந்தியின் வாக்குமூலம் 

கோயம்பேடு போலீஸ் ஏட்டுவால் சிக்கிய ஜெயந்தி

`கோயம்பேடு பஸ்நிலையத்தில் நான் காத்திருந்தபோதுதான் முதலில் போலீஸ் ஏட்டு எனக்கு அறிமுகமானார். என்னுடைய குடும்பக் கதையைக் கேட்ட அவர் பரிதாபப்பட்டார்' என்று கூறியிருக்கிறார் ஜெயந்தி 

சென்னையில் பாலியல் தொழில் செய்துவந்த ஜெயந்தி என்ற பெண்ணுடன் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு ஒருவர் நட்பாக இருந்துள்ளார். ஜெயந்தி மூலம் ஆடம்பரமாக வாழ்ந்த போலீஸ் ஏட்டு தற்போது சிக்கிக் கொண்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர். 

இந்தச் சம்பவத்தின் முன்கதை சுருக்கம் 

சம்பவத்தன்று அமைந்தகரை என்.எஸ்.கே.நகரில் ஜெயந்திக்கும் தனியார் நிறுவன ஊழியரும் டிரைவருமான விஸ்வநாதனுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்தப் பஞ்சாயத்து போலீஸ் நிலையத்துக்குச் சென்றது. அப்போதுதான் போலீஸ் ஏட்டு குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, பாலியல் தொழில் செய்துவந்த ஜெயந்தியுடன் சேர்ந்து போலீஸ் ஏட்டு சிலரை மிரட்டிப் பணம் பறித்த தகவலும், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனால் போலீஸ் ஏட்டுவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநான் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஜெயந்தி, போலீஸ் ஏட்டு ஆகியோர் மீது அமைந்தகரை போலீஸார், வழக்குப் பதிந்து ஜெயந்தியை மட்டும் கைது செய்துள்ளனர். போலீஸ் ஏட்டு தலைமறைவாக உள்ளதால் அவரை தேடிவருகின்றனர். 

போலீஸ் ஏட்டுவுடன் ஜெயந்தி அறிமுகமானது எப்படி என்று விசாரித்தோம். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சில ஆண்டுகளுக்கு முன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஜெயந்தி காத்திருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த போலீஸ் ஏட்டு, ஜெயந்தியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விசாரித்தபோது ஜெயந்தியின் குடும்பக் கதையைக் கேட்டு போலீஸ் பரிதாபப்பட்டுள்ளார். அதன்பிறகே இருவருக்குமான நட்பு தொடர்ந்துள்ளது" என்றனர். 

ஜெயந்தி குறித்து விசாரித்தபோது, அவருக்குத் திருமணமாகிவிட்டது. கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால்தான் இந்தத் தொழிலுக்கு அவர் வந்துவிட்டார் என்கின்றனர் போலீஸார். ஜெயந்தியிடம் போலீஸ் ஏட்டு குறித்து விசாரித்தபோது அவர் எனக்குத் தெரியும் என்ற தகவலை மட்டும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஜெயந்தி எந்தவித பதிலும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார். இதனால், போலீஸ் ஏட்டு குறித்த தகவலை ஜெயந்தியிடமிருந்து பெற முடியாமல் அவரை சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார். தற்போது, ஜெயந்தி மீது விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸில் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்று விசாரணை நடந்துவருகிறது. ஜெயந்தியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் என்ற விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் போலீஸ் ஏட்டு குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுவருகின்றன. ஜெயந்தி, போலீஸ் ஏட்டு கூட்டணிக்குப் பின்னணியில் யார், யார் இருந்தார்கள் என்பது குறித்து விசாரிக்க போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். போலீஸ் ஏட்டு குறித்து விசாரிக்க ஜெயந்தியைக் காவலில் எடுக்கலாமா என்ற யோசனையிலும் போலீஸார் உள்ளனர். 

 போலீஸ் ஏட்டு

இதற்கிடையில் ஜெயந்தியின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்து சில முக்கியத் தகவல்களைக் கைப்பற்றியுள்ளனர். அதோடு ஜெயந்தி பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் அதை ஆய்வு செய்துவருகின்றனர். அதில், ஜெயந்தியும் போலீஸ் ஏட்டுவும் பேசியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஜெயந்தியின் போனை போலீஸார் ஆய்வு செய்தபோது அதில் சில வீடியோக்கள், ரெக்கார்டுகள் கிடைத்துள்ளன. அதுதொடர்பான விசாரணையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

போலீஸ் ஏட்டு சிக்கிய விவகாரம், ஓட்டு மொத்த காக்கிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு போலீஸ் ஏட்டுவுக்கு உதவிய காக்கிகள் சிலர் கலக்கத்தில் உள்ளனர். ஜெயந்தி, போலீஸ் ஏட்டு ஆகியோர் குறித்து புதுப்புது தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதை உறுதிப்படுத்த போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி சென்ற ஹோட்டல்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். 

ஜெயந்தி மீது புகார் கொடுத்த விஸ்வநாதனிடம் போலீஸார் விசாரித்தபோது, போலீஸ் ஏட்டு குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதோடு விஸ்வநாதனைச் சிக்க வைக்க போலீஸ் ஏட்டுவுடன் சேர்ந்து ஜெயந்தி போட்ட திட்டத்தை முறியடிக்க விஸ்வநாதன் கடுமையாகப் போராடியுள்ளார். முதலில் இந்த விவகாரத்தை மூடிமறைத்து போலீஸ் ஏட்டுவைக் காப்பாற்ற காக்கிகள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், போலீஸ் ஏட்டு, ஜெயந்தி குறித்த ஆதாரங்களை கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பியதால் உடனடி நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பிறகே ஜெயந்தியை போலீஸார் கைதுசெய்துள்ளனர். ஜெயந்தி கைதான தகவல் தெரிந்ததும் தலைமறைவாகி விட்டார் போலீஸ் ஏட்டு. அவர் சிக்கினால் இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

போலீஸ் ஏட்டு ஜெயந்தியுடன் சேர்ந்து பாலியல் தொழில் நடத்தியதாக தகவல் வெளியானது. அதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு `அது, தவறான தகவல். இருப்பினும் போலீஸ் ஏட்டு குறித்து முழு விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டுள்ளோம். அதன்பிறகுதான் எதையும் சொல்ல முடியும்' என்றார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆதரவற்ற நிலையிலிருக்கும் இளம்பெண்களுக்கு உதவி செய்வது போல நடித்து போலீஸ் ஏட்டு அவர்களை பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தியதாக வெளியான தகவல் குறித்து கேட்டதற்கு, `அந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் அந்தக் கோணத்தில் விசாரித்துவருகிறோம்' என்றார். 

 போலீஸ் ஏட்டு செய்த காரியத்தால் சென்னைக் காக்கிகளுக்குக் கடும் அவமானம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் ஏட்டு குறித்த தகவல்கள் வெளியில் வராமல் இருக்க விசாரணை அதிகாரிகளின் வாய்களுக்குக் கடிவாளம் போட்டுள்ளனர் போலீஸ் உயரதிகாரிகள்.