`கீழடி அகழாய்வில் 14,500 தொல்லியல் எச்சங்கள் கண்டெடுப்பு’- அமைச்சர் தகவல் | We Found 14,500 archaeological remains in keezhadi excavation says Minister

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (28/11/2018)

கடைசி தொடர்பு:15:20 (28/11/2018)

`கீழடி அகழாய்வில் 14,500 தொல்லியல் எச்சங்கள் கண்டெடுப்பு’- அமைச்சர் தகவல்

மாஃபா

தமிழ் கூடல் எனும் நிகழ்ச்சி வாரம் ஒரு முறை என இந்த வருடம் முழுவதும் 48 நிகழ்ச்சிகள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவுக்கு தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் மா ஃபா பாண்டியராஜன் வருகை தந்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், `தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட பழங்குடியினர் பண்பாட்டு மையம் சார்பில் ஊட்டியில் தற்போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் துறை மூலம் தோடர் இனப் பழங்குடியினர் குறித்த கலாசார ஆய்வு நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடங்க இருக்கிறது. மொத்தம் 14,500 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் 4-வது கட்ட அகழாய்வு அறிக்கைத் தயாரிக்கும் பணி முடிவடைந்து விடும்.

முதல் கட்ட அகழாய்வில் கிடைத்தப் பொருள்கள்  மைசூரிலும், 2வது மற்றும் 3வது கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சென்னை தலைமைச் செயலக வளாகத்திலும், நான்காவது கட்ட அகழாய்வில் கிடைத்தப் பொருள்கள் கீழடி அரசுப் பள்ளி வளாகத்திலும் முழு பாதுகாப்போடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சில பொருள்கள் கால அளவீடு செய்ய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதத்துக்குள் கீழடியில் அகழ் வைப்பகம் அமைப்பதற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை காந்தி மியூசியம், சென்னை கோட்டை அருங்காட்சியகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 36 அருங்காட்சியங்களோடு புதிதாக அரியலூரில் விரைவில் டைனோசர் மியூசியம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில், பூம்புகார் சார்பாக 50 கோடி திட்ட மதிப்பீட்டில் பழந்தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி, ஐந்திணைப் பூங்கா கண்காட்சி அமைய பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் வைக்கப்பட வேண்டிய சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.