சேமிப்பு உண்டியலை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்த மூன்றாம் வகுப்பு மாணவி..! | Chennai based primary school student donates her little savings for Gaja relief works!

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (28/11/2018)

கடைசி தொடர்பு:14:45 (28/11/2018)

சேமிப்பு உண்டியலை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்த மூன்றாம் வகுப்பு மாணவி..!

`கஜா' புயலினால் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது. நமக்கு உணவு அளித்து வந்த மக்கள் உறங்கவும், உண்ணவும் கையேந்துவதைப் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு களம் இறங்கியுள்ளனர். அந்த வகையில் விகடனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம் கொடுத்து வருகின்றது. விகடன் அலுவலகத்துக்கு தன் தாத்தாவோடு வந்து தான் சேமித்து வைத்திருந்த உண்டியலை ஒப்படைத்துச் சென்றார், சஞ்சனா.

சேமிப்பு உண்டியலைக் கொடுத்த சிறுமி

``நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். வீட்டுல தாத்தாவும், அம்மாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால முடிஞ்ச உதவிகளை செய்யலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க. நான் என் உண்டியலில் கொஞ்சம் காசு சேமித்து வைச்சிருந்தேன். அதைக் கொண்டு வந்து தாத்தாகிட்டக் கொடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு சொன்னேன். தாத்தா இங்கே கூட்டிட்டு வந்தாங்க'' என தன்னுடைய மழலை மணம் மாறாமல் பேசிய சஞ்சனாவின் உண்டியலில் 3550 ரூபாய் பணம் இருந்தது. அவருடைய தாத்தா நாகேந்திர பாரதி கூறும்போது, ``வீட்டுல நாங்க பேசிட்டு இருந்ததைக் கேட்டுட்டு அவ மூணு உண்டியல்ல ஒரு உண்டியலை உங்க ஆபீஸ்ல வந்து கொடுக்கணும்னு சொன்னா.  ரொம்ப பெருமையா இருந்தது'' என்று நெகிழ்ந்தார்.

பென்ஷன் பணம் வாங்கும் முதியவர் ஒருவர், `நான் என் பையன் வீட்டுல தாம்மா இருக்கேன். எனக்கு என் மகன் சோறு போடுறான். அடுத்த மாசம் பென்ஷன் காசை அவன்கிட்ட கொடுக்குறேன். இந்த மாசம் கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குக் கொடுக்கிறேன்னு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அன்பு சூழ் உலகு..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க